மளிகை கடையில் சாராயம் விற்பனை- கையும் களவுமாக பிடித்த திமுக எம்.எல்.ஏ

 
puducherry

புதுச்சேரியில் பிரபல தனியார் பள்ளி எதிரே மளிகை கடையில் கள்ளச்சாராயம் பாக்கெட் மற்றும் பாட்டிலில் விற்பனை செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தியதில் 55க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள். ‌இது தொடர்பாக, புதுச்சேரி சேர்ந்த மாதேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் முதலியார் பேட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத், தனது தொகுதி முழுவதும் கள்ள சாராயம் விற்பனை செய்தால் தனக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று  வேல்ராம்பட்டு மாரியம்மன் கோயில் பிரபல தனியார் பள்ளிக்கு எதிரே மளிகை கடையில் சாராயம் விற்பது போன்ற வீடியோவை அவருக்கு சிலர் அனுப்பி வைத்தனர்.

இதன் அடிப்படையில் முதலியார் பேட்டை போலீஸ் உதவியுடன் வேல்ராம்பட்டு மாரியம்மன் கோயில் தெருவிற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் சம்பத் நேரடியாக மளிகை கடையில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததை கையும் களவுமாக பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தார். மேலும் கடைக்குப் பின்புறம் குடிமகன்கள் அமர்ந்து சாப்பிட மினி பார் ஒன்றும் நடத்தி வந்தது தெரிய‌வந்தது . அதன் முன்பு அதிமுக கொடி பறந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த இடத்தில் சோதனை செய்ததில் சாக்கு மூட்டைகளில் சாராய பாக்கெட் மட்டும் பாட்டில் அடைக்கப்பட்டு சாராயம் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது இதன் அடுத்து  சுமார் 50,000 மதிப்புள்ள மதுபான பாக்கெட் மற்றும் பாட்டில்களை போலீசார் பதிவு செய்து சக்கரவர்த்தி என்பவரை  கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கலால் துறை தாசில்தார் சிலம்பரசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் சம்பத் கூறுகையில், ”கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து புதுச்சேரியில் அது போன்ற சம்பவம் நிகழக்கூடாது என்று தனது தொகுதி மக்கள் மீது அக்கறை கொண்டு அறிவுறுத்தி வந்த நிலையில் தற்போது சாராயம் விற்கப்பட்டிருக்கிறது. இந்த சாராயம் எங்கிருந்து வந்தது யார் விற்பனை செய்கிறார்கள் என்று விசாரணை செய்து சாராயம் எந்த கடையில் இருந்து வாங்கப்பட்டதோ அந்த கடைக்காரரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.