"கமல்ஹாசனின் பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்”- மு.க.ஸ்டாலின்
பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் கமல்ஹாசனின் பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேட்பாளர்களை நிறுத்தாமல் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிவித்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான திரு. கமல்ஹாசன் அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார். இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் @MaiamOfficial தலைவருமான திரு. @ikamalhaasan அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை… https://t.co/bsCxEIUlqG pic.twitter.com/1jJFuiCmpL
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 24, 2026
தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் #DravidianModel 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்! பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

