“மின்மினிப் பூச்சிகள் வந்து போகும், சூரியன் நிரந்தரமாக இருக்கும்”- மு.க.ஸ்டாலின்

 
s

கட்சியில் பொறுப்புகளை இழப்பவர்கள் யாரையும் கைவிடப் போவதில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கட்சி மாவட்டங்கள் 110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 76 தலைமை கழகப் பிரதிநிதிகளுடன் காணொலி வழியே இன்று ஆலோசனை நடத்தினார். மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நூறு ஆண்டுகள் கட்சியை வழிநடத்த தற்போது கட்டமைப்பை மேம்படுத்தப்பட்டுள்ளது. வயது வரம்பு மற்றும் ஒருவர் அதிக முறை பதவியில் இருக்க முடியாது என்ற வரம்புகள் காரணமாக பொறுப்புகளை இழப்பவர்கள் யாரையும் கைவிடமாட்டேன். அவர்கள் அனைவரும் அவர்கள் தகதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் முடிவெடுப்பேன். ஆணிவேரை பலப்படுத்தும் பெரும் பொறுப்பு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கட்சியை மறுசீரமைப்போம். மீண்டு வருவோம், மீண்டும் வெல்வோம். கொள்கையற்ற கட்டமைப்பற்ற கட்சிகள் வரும் போகும். மின்மினிப் பூச்சிகள் வந்து போகும், சூரியன் நிரந்தரமாக இருக்கும்” என்றார்.