"ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜியின் ஆற்றல் எதிரிகளின் தூக்கத்தை கெடுக்கிறது"- மு.க.ஸ்டாலின்
ஒவ்வொரு முகவரும் 5 முறையாவது வாக்காளரை சந்திக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தி.மு.க. மேற்கு மண்டல மேற்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பாசக்கார மேற்கு மண்டலத்தில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் நான் மிகுந்த பெருமகிழ்ச்சி அடைகிறேன்! கோவை மண்ணில் காலையில் நான் கால் வைத்ததும் “ஏனுங்க தலைவரே சவுக்கியமா” என்று கேட்டு, பாசத்தில் நிறைத்துவிட்டீர்கள்! அதிலும், கல்லூரி மாணவிகள், குடும்பங்கள் என்று திரண்டு வந்து நீங்கள் கொடுத்த வரவேற்பில் “நாம்தான் ஜெயிப்போம்” என்று இருநூறு சதவிகிதம் உறுதியாகிவிட்டது! இந்த கோவை மண் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் – பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றில் முக்கியமான ஊர், இந்த ஊர். பெரியாரை அண்ணா சந்தித்தது இந்த கோவை மண்டலத்தில்தான்! தலைவர் கலைஞரை எம்.ஜி.ஆர். சந்தித்ததும் இங்குதான்! இந்தி திணிப்பிற்கு எதிரான போரில் பொள்ளாச்சி நிகழ்வை யாரும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட இந்த கோவை மண்ணில், கழகத்தின் வேர்களாக, கழகத்திற்கும் மக்களுக்குமான உறவுப்பாலமாக கழக வெற்றிக்கான அடித்தளமாக இருக்கும் வாக்குச்சாவடிக் குழுவினரான உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேற்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தையே மாபெரும் மாநாடு போல் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார் ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்கள்! இவரது இந்த ஆற்றல்தான் எதிரிகள் பலரின் தூக்கத்தை கெடுக்கிறது. செந்தில் பாலாஜிக்கு அவர்கள் கொடுத்த குடைச்சல்களை வைத்தே இவர் எந்த அளவிற்கு எதிராளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பதை உணரலாம். செந்தில் பாலாஜி அவர்கள் அனுபவித்த தொல்லைகள் மாதிரி வேறு யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். மிரட்டலுக்கு பயந்து முதுகு வளைந்து கும்பிடு போடுபவர்களுக்கு இடையே இவர் எந்த மிரட்டலுக்கும் பயந்து அடிபணியவில்லை! நெருக்கடிகளுக்கு தலைவணங்காமல், நெஞ்சுரத்தோடு எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கிறார். செந்தில் பாலாஜி அவர்கள் கழகத்திற்கும், தலைமைக்கும் உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அந்தளவிற்கு சிறப்பாக பணியாற்றி வரும் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், அவருக்கு துணை நிற்கும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள்!இந்த என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி மாநாடுகளை, பிப்ரவரி 11-ஆம் தேதி திருவிடந்தையில் தொடங்கினோம்! அடுத்து, திருப்பத்தூர், மதுரையை தொடர்ந்து கோவையில் நிறைவு செய்கிறோம். சுமார் ஏழு இலட்சம் வாக்குச்சாவடி குழுவினரை இப்படி சந்தித்திருக்கிறேன். இங்கு நான் வந்திருப்பது, உங்களை உற்சாகப்படுத்த மட்டுமல்ல. உங்களைப் பார்த்து, நானும் உற்சாகம் அடைவதற்கும், புத்துணர்வு பெறுவதற்கும்தான் வந்திருக்கிறேன். உங்கள் முகங்களைப் பார்க்கும்போது உங்களின் மகிழ்ச்சியும், எனர்ஜியும் எனக்கும் ட்ரான்ஸ்ஃபர் ஆகிறது! உங்கள் கான்ஃபிடன்ஸைப் பார்த்து, என்னுடைய கான்ஃபிடன்ஸ் லெவலும் அதிகமாகிறது!
இந்த மேற்கு மண்டலத்தில் 14 மாவட்டக் கழகங்கள் 39 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கிறது. இது எல்லாவற்றிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற செய்திதான் ரிசல்ட் அன்றைக்கு ஃபிளாஷ் நியூஸாக வர வேண்டும்! வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த மேற்கு மண்டலத்தை பொறுத்தவரைக்கும் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை! அதை சரிசெய்து மாபெரும் வெற்றியை பெற்றுத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் இங்கு மேடையில் இருப்பவர்களுக்கு இருக்கிறது. எதிரில் கூடியிருக்கும் உங்களுக்கும் இருக்கிறது! செய்துவிடுவீர்களா? உறுதியாக செய்துவிடுவீர்களா?

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த மண்டலத்தில் எப்படி பெரிய வெற்றியை பெற்றோமோ அதேபோல் பெரிய வெற்றியை சட்டமன்றத் தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும். அந்த அளவிற்கு மேற்கு மண்டலத்திற்கு திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம். காலையில் கோவைக்கு வந்ததிலிருந்து, என்னுடைய நினைவில் இருக்கும் வரைக்கும் சொல்கிறேன்.
• பல்வேறு இடர்களை கடந்து அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.
• கோவையில் I.T. பார்க் – செம்மொழிப் பூங்கா – ஜி.டி.நாயுடு மேம்பாலம், அவினாசி சாலை மேம்பாடு – விசைத்தறிக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் – விசைத்தறி மற்றும் சிறு தொழில்களுக்கு மின் கட்டண குறைப்பு – விசைத்தறியை நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு – சாலை இல்லாத மலைக் கோயில்களுக்கு சாலை வசதிகள்
• இதுமட்டுமல்லாமல், கோவையில் தந்தை பெரியார் பெயரில் மாபெரும் நூலகம் அமைய இருக்கிறது.
• உலக தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைய இருக்கிறது.
• வெள்ளலூர் பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற இருக்கிறது.
• தோழி விடுதிகள் கட்டப்பட இருக்கிறது.
• சூலூர் பகுதியில் செமி கண்டக்டர் தொழில் பூங்கா வரப் போகிறது.
• கோவை மாவட்டத்திற்கு 75 புதிய E-Bus வர போகிறது.
• மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட இருக்கிறது.
இன்னும் ஏராளமான திட்டங்கள் மேற்கு மண்டலத்திற்கு வர இருக்கிறது. எனவே, தொழில் முனைவோர் அதிகமாக இருக்கும் இந்த மேற்கு மண்டலம் வளர்ச்சியைத்தான் விரும்பும் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்.இங்கு வந்திருக்கும் உங்களின் ஒவ்வொரு பூத்திற்கும் எவ்வளவு டார்கெட்? 350 வாக்குகள்! இந்த டார்கெட்டை அச்சீவ் செய்துவிட்டாலே, சுலபமாக, 2 கோடியே 60 இலட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் பெற்றுவிடலாம். இந்தத் தேர்தலில், நாம் 2 கோடியே 50 இலட்சம் வாக்குகளுக்குக் குறையாமல் பெற்றே ஆக வேண்டும்! இதை பெற்றுக் காட்டுவது உங்கள் பொறுப்பு! உங்களுக்கு என்ன வேண்டுமோ அந்த உதவிகளை செய்து தருவது என்னுடைய பொறுப்பு! “2 கோடியே 50 இலட்சமா?” என்று பெரிய நம்பரை யோசித்து யாரும் ஷாக் ஆகாதீர்கள். இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஆளுக்கு 40-50 வாக்குகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு செட் செய்திருக்கும் டார்கெட்டை அச்சீவ் செய்துவிட்டாலே போதும்! நான் சொன்ன நம்பர் வந்துவிடும்! 200 தொகுதி நிச்சயம்! 200 தொகுதிகளுக்கு கூடுதலாகவும் வெற்றி பெறுவதுதான் நம்முடைய இலட்சியம்! அடுத்த 2 மாதம்! உங்களுக்கும் சரி - எனக்கும் சரி ‘No Rest’! ஒவ்வொரு வாக்காளரையும் நீங்கள் எல்லோரும் குறைந்தது
5 முறையாவது நேரில் சந்திக்க வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் தெரியுமா? என்னதான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் இப்படி புதுப்புது ஊடகங்கள் வந்தாலும், ஒருவரின் வீட்டு படியேறி சென்று, அவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு பணிவாக வாக்கு கேட்கும் பிரசாரத்திற்கு எதுவுமே ஈடாகாது! ஆன்-லைன், ஆன்-ஃபீல்டு இரண்டிலும் தி.மு.க.வின் செயல்பாடுகள்தான் நிறைந்திருக்க வேண்டும்! பரம்பரை பரம்பரையாக தி.மு.க.விற்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும் சரி, இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி, பிரசாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களை நாம் சந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும்! சாதனைகளைச் சொல்லி, வாக்குறுதிகளைச் சொல்லி, வாக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்! இதை நீங்கள் ரிப்பீட் மோடில் செய்ய வேண்டும்! அப்போதுதான் நம்முடைய வெற்றியும் ‘ரிப்பீட்’ ஆகும்! தேர்தல் அன்றைக்கு பூத்திற்கு வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்களிக்கும் வரை, ஓய்வே இருக்க கூடாது! வீடுவீடாகச் சென்று பணிவாக... கனிவாக... மரியாதையாக... நட்பாக அணுக வேண்டும்! ஏன் என்றால், என்றைக்குமே மக்கள்தான் எஜமானர்கள்! நாம் அவர்களின் சேவகர்கள்! மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு, அவர்களின் இன்ப துன்பங்களில் கூடவே நிற்பதால்தான், தேர்தலில் அவர்களும் நம்முடன் நிற்கிறார்கள்! 75 ஆண்டுகளாக திமுக வலிமையாக இருப்பதன் இரகசியம் இதுதான்! நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் செய்யாத அளவிற்கு ஏராளமான சாதனை திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம். பெண்களை எடுத்துகொண்டால் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை. மகளிர் விடியல் பயணம், போன்ற திட்டங்கள். மாணவர்களை எடுத்துகொண்டால், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் மூலமாக கல்லூரி மாணவ மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம். நான் முதல்வனில் திறன் பயிற்சிகள் கொடுக்கிறோம். இப்போது லேப்டாப்பும் கொடுக்கிறோம்.
மருத்துவத் துறையை எடுத்துக்கொண்டால், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48, நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற பல திட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொரு துறையாக எல்லாவற்றையும் பட்டியலிட்டு சொன்னால் அதற்கே ஒரு நாள் ஆகிவிடும். என்னிடம் அவ்வளவு பெரிய லிஸ்ட் இருக்கிறது. இதுதான், திராவிட மாடல்! உங்களுக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்திருக்கிறோம். அதில் அனைத்து சாதனைகளும் இருக்கின்றன. இது எல்லாவற்றையும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் - ஒவ்வொரு குடும்பத்திற்கும் சென்று சேர்த்து இந்த திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும் என்றால், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும் என்று நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்! அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்! அந்த நம்பிக்கையை தேர்தல் நாளில் வாக்குகளாக மாற்ற வேண்டும்! இதுதான் உங்கள் கடமை! “வெல்லும் தமிழ்ப் பெண்கள்”, “ஸ்டாலின் மகளிர் படை” என்ற பெயரில் ஏற்கெனவே நம்முடைய கழக மகளிர் வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் கலக்கிக்கொண்டு இருக்கிறோர்கள். நான் தினமும் உங்களின் பரப்புரை வீடியோவை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். மக்களிடம் பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்த பிரசாரங்களுக்காக உங்களுக்கு தேவைப்படும் தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகத்தையும் உங்களுக்கு வழங்யிருக்கிறோம். அதில், நம்முடைய திராவிட மாடல் அரசின் 5 ஆண்டு சாதனைகள் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களால் ஒருவராவது நிச்சயம் பயன்பெற்றிருப்பார்கள். அதனால், நம்பிக்கையுடன் பிரச்சாரம் செய்யுங்கள். அடுத்த இரண்டு மாதத்திற்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் – எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் – அங்கு, தி.மு.க.வும் – உதயசூரியனும்தான் இருக்க வேண்டும். தெருமுனைக் கூட்டங்கள் – திண்ணைப் பிரச்சாரங்கள் – சமூக வலைதள பிரச்சாரங்கள் என்று அனைத்திலும் நாம்தான் முத்திரை பதிக்க வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் என்பதை வெறும் வாய் வார்த்தைகளில் சொல்லாமல், ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் என்ன தேவை என்பதையும் உன்னிப்பாக பார்த்துப் பார்த்துத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
வளர்ச்சி என்றாலே பிடிக்காத ஒரு கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது. மக்கள் அவர்களை தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க.வை தன்னுடைய கிளைக் கழகமாக மாற்றி அதில் முன்னேறி வரலாமா என்று நினைக்கிறது பா.ஜ.க. பிரதமர் மோடி அவர்கள் திடீர் என்று அம்மையார் ஜெயலலிதா புகழ் பாட ஆரம்பித்திருக்கிறார். எந்த அம்மையார் ஜெயலலிதா–வை புகழுகிறார்? “குஜராத் மோடியா? இந்த லேடியா?” என்று சவால்விட்ட அம்மையார்மீது திடீர் பாசம் இன்றைக்கு மோடிக்கு வந்திருக்கிறது. மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… அம்மையார் ஜெயலலிதா விட்ட சவால் உங்களுக்கு மறந்துவிட்டதா? இல்லை, “இந்தியாவிலேயே அ.தி.மு.க. அரசாங்கம்தான் ஊழல் அதிகமாக நடக்கும் அரசாங்கம்” என்று உங்களின் நம்பர் 2 அமித் ஷா பேசினாரே அதை மறந்துவிட்டீர்களா? நீங்கள் மறந்திருக்கலாம்; ஆனால், இது எதையுமே தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை. இதையெல்லாம், மறந்துவிட்டு அல்ல; மறைத்துவிட்டு பிரதமர் பேசுவது எதற்காக என்றால், ஒன்றிய பா.ஜ.க.வின் 12 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்று எதுவுமே செய்யவில்லை. சொல்லிக் கொள்ள சொந்தமாக சாதனைகள் இல்லாததால் - அம்மையார் ஜெயலலிதாவின் புகழ் பாடினால் வாக்குகள் வருமா என்று பார்க்கிறார்! தேர்தல் வந்துவிட்டதே என்றுகூட தமிழ்நாட்டிற்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் பட்ஜெட்டில் அறிவிக்க மனம் இல்லாத உங்களின் நடிப்பை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக நம்ப மாட்டார்கள். மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாடு உங்களிடம் கேட்பது என்ன தெரியுமா? தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மெட்ரோவிற்கு ஏன் அனுமதி தரவில்லை? கோயில் நகரமான மதுரை மெட்ரோவிற்கு அனுமதி கொடுத்துவிட்டீர்களா? திருச்சி மெட்ரோவிற்கு அனுமதி வழங்க எது தடுக்கிறது? கேபினட் மீட்டிங்கில் அகமதாபாத் மெட்ரோவிற்கு அனுமதி கொடுத்த நீங்கள், தமிழ்நாடு மெட்ரோ திட்டத்திற்கு ஏன் அனுமதி தர மறுக்கிறீர்கள்? இது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?
எங்களின் கோரிக்கைகளையும் - தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கும் துரோகங்களையும் - ஓரவஞ்சனைகளையும் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன? ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி எங்கே? சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முழுமையான நிதியை எப்போது தருவீர்கள்? பள்ளிக் குழந்தைகளுக்கு சேர வேண்டிய 3 ஆயிரத்தி 500 கோடி ரூபாய் S.S.A. நிதியை தராமல் ஏன் இழுத்தடிப்பதற்கு என்ன காரணம்? ஜல்ஜீவன் இயக்கத்திற்கான மானியத்தை 3 ஆயிரத்தி 548 கோடி ரூபாயை எப்போது தருவீர்கள்? ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தர வேண்டிய 2 ஆயிரத்தி 246 கோடி ரூபாயை எப்போது தருவீர்கள்? ஒன்றிய அரசு திட்டங்களுக்கு தர வேண்டிய நிதியைக் கூட ஏன் தராமல் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்? ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு 9 ஆயிரத்தி 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படப் போகிறதே, இது அநியாயம் இல்லையா?ரிசர்வ் பேங்கில் தமிழ்நாடு அக்கவுண்டில் இருந்த ஆயிரத்தி 709 கோடி ரூபாயை ஒன்றிய அரசு பிடித்தம் செய்தது சரியா? தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு 16 ஆயிரத்தி 290 கோடி ரூபாய் இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து, கூடுதல் சுமையை ஏற்றியது சரியா? இதையெல்லாம் செயற்கையான நிதி நெருக்கடி என்று சொல்லாமல், வேறு என்ன என்று சொல்வது? தமிழ்நாட்டின்மீது வன்மத்தோடு இப்படிப்பட்ட அநியாயங்களை செய்யும் பா.ஜ.க.வோடுதான் கூட்டணி வைத்துக் கொண்டு மாபெரும் துரோகியாக இன்றைக்கு உருவெடுத்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள். தமிழர் விரோதிகளும் - தமிழினத் துரோகிகளும் வைத்துள்ள இந்தக் கூட்டணியை மக்கள் முன் அம்பலப்படுத்தி அவர்களுக்கு தோல்வியைப் நாம் பரிசாக தந்தாக வேண்டும். இதுதான் நம் முன் இருக்கும் முதல் கடமை. பொதுவாக, தேர்தல் கூட்டணிகளின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. ஆனால், தி.மு.க. தலைமையிலான நம்முடைய கூட்டணி அதை உடைத்திருக்கிறோம்! பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஜனநாயக நோக்கத்துடன், 2019 தேர்தலுக்கு முன்பு தொடங்கப்பட்ட நம்முடைய கூட்டணி, தொடர்ந்து நடந்த 2021 சட்டமன்றத் தேர்தல், இடையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், இப்போது 2026 சட்டமன்றத் தேர்தல் வரையிலும் கொள்கை உறுதியுடன் தொடர்கிறது!
எனக்கு தெரிந்து தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றிலேயே, இவ்வளவு நீண்ட காலம் ஒற்றுமையுடன் ஒரு கூட்டணி தொடர்வது இதுதான் முதன்முறை! வளர்ச்சியிலும் சாதனைத் திட்டங்களிலும் மட்டுமல்ல, கூட்டணியிலும் நாம் வரலாறு படைத்திருக்கிறோம்! “வெல்வோம் ஒன்றாக” என்று ஒவ்வொரு கூட்டத்திலும் ஏன் சொல்கிறேன் என்றால், ‘கொள்கையில்’ வெல்வோம் ஒன்றாக என்ற பொருளையும் சேர்த்துதான் அப்படி சொல்கிறேன். அண்மையில், எதிர்க்கட்சித் தலைவர் திரு. பழனிசாமி அவர்கள் என்ன பேசினார் என்று பார்த்தீர்களா? தேர்தலுக்காகத்தான் அவர்கள் கூட்டணியை அமைத்திருக்கிறார்களாம். சர்க்கஸ் முடிந்ததும் எவ்வாறு கூடாரத்தை பிரித்திவிடுவார்களோ, அதேபோன்று தேர்தல் முடிந்ததும் இவர்கள் மறுபடியும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து தங்களுடைய நாடகத்தை தொடர்வார்கள். இப்படிப்பட்ட N.D.A. சர்க்கஸின் ரிங் மாஸ்டர்தான் - பா.ஜ.க. அவர்கள் சொன்னபடி தமிழ்நாட்டு மக்கள் முன் வித்தை காட்டுபவர்தான் பழனிசாமி! பழனிசாமி அவர்கள், தான் என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாரா என்று எனக்கு புரியவில்லை. அவர் ‘லேபர்’-ஆக சேர்ந்திருக்கும் ஓனரின் தலைமையிலான கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணி - சந்தர்ப்பவாத கூட்டணி! அதை அவரே மக்களிடம் ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார். பத்து தோல்வி பழனிசாமி அவர்களே! நீங்கள் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசிவிட்டீர்கள். N.D.A. கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி மட்டுமல்ல, வழக்குகளில் இருந்து தன்னையும் சொந்தகாரர்களையும் காப்பாற்றிக் கொள்ள பழனிசாமி சுயநலத்துடன் இணைந்திருக்கும் கூட்டணி. எப்போது எல்லாம் தனக்கு பிரச்சினை வருகிறதோ, அப்போது எல்லாம் டெல்லிக்கு காரில் மாறி மாறிச் சென்று சரணாகதி அடைவது அவருக்கு பழக்கமானதுதான். ஆனால், நாம் அப்படியா? ஒரு கொள்கையில் உறுதியாக நின்று போராடுகிறோம்! இப்போது கூட பாருங்கள்! டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்கள்! நேர்மையாக நேர் வழியில் தேர்தலை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாமல் கோழைத்தனமாக நடந்து கொண்டார்கள். இன்றைக்கு “அந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை” என்று சொல்லி நீதிமன்றமே சொல்லிவிட்டது. மரியாதைக்குரிய அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களும், அவர் கட்சியைச் சேர்ந்த மனீஷ் அவர்களும் சிறையில் கழித்த நாட்களை பா.ஜ.க.வால் திரும்பத் தர முடியுமா? மீண்டும் டெல்லியில் தேர்தல் நடத்த முடியுமா? இதே ஃபார்முலாவை தமிழ்நாட்டிலும் செய்ய நினைக்கிறார்கள். தங்களின் ஏவல் அமைப்புகளை வைத்து நம்மை மிரட்டப் பார்க்கிறார்கள். உங்களின் அரட்டல் மிரட்டலுக்கு பயப்பட நாங்கள் அடிமையும் இல்லை, கோழையும் இல்லை! தைரியமாக உங்களை எதிர்கொள்வோம்!
அதனால்தான், மக்கள் மட்டுமல்லாமல் பல கட்சிகளும் நம் மீது நம்பிக்கை வைத்து நம்முடைய கூட்டணியில் இணைகிறார்கள். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை குறைவதைத்தான் பார்த்திருக்கிறோம்! அந்த வழக்கத்திற்கு மாறாக நம்முடைய கூட்டணியின் பலம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. தி.மு.க. மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்கவில்லை. யாரெல்லாம் பா.ஜ.க.வின் தமிழ் விரோத அரசியலை எதிர்க்கிறார்களோ அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். திராவிடம், காந்தியம், மார்க்சியம், அம்பேத்கரியம், சிறுபான்மையினர் நலன், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் என்று அனைத்து குரல்களையும் கொண்ட மதச்சார்பற்ற ஜனநாயக சக்தியாக - இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக நம்முடைய கூட்டணி இருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் மக்களுக்காக வைக்கும் கோரிக்கைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி கொடுக்கும் அரசாக நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் நம்மை நாடி இத்தனை பேர் வருகிறார்கள். ஒரு ஆரோக்கியமான ஜனநாயகம் என்பது அனைத்து தரப்பு குரல்களுக்கும் இடம் கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும். அப்படித்தான் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இருக்கிறது. இங்கு இருக்கும் அனைவருக்கும் தெளிவாக சொல்றேன்... புரிந்து கொள்ளுங்கள். நாம் போராடுவது, நம்முடைய கழக வெற்றிக்கும்; கூட்டணி வெற்றிக்கும் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக. பா.ஜ.க.வின் டப்பா இஞ்சின் முன்னாடி, தமிழ்நாட்டோட சூப்பர் பாஸ்ட் இஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது. அதனால்தான், இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டியது, “இது தமிழ்நாடு அணி வெர்சஸ் டெல்லி அணியா?” என்று சொல்லி பரப்புரை செய்கிறேன். இதில் வெற்றி பெறப்போவது நம்முடைய மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியின் தமிழ்நாடு அணிதான்! களத்தில் உழைப்போம்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! வெல்வோம் ஒன்றாக!” என்றார்.

