10 வருட பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட திமுக இளைஞரணி படை தயார்: உதயநிதி ஸ்டாலின்
திமுகவின் இளைஞரணி மாநாட்டை ஒட்டுமொத்த இந்தியாவையே வியப்பாக திரும்பிப் பார்க்கிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்றுவரும் திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் உரையாற்றிய திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “ஜனவரி 21ம் தேதி எனது வாழ்வில் மறக்க நாள். திமுக இளைஞரணி மாநாடு 100% வெற்றி. 2024ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெற்றி மாநாடு. சேலத்தில் வீரத்தோடு திமுகவின் இளைஞர் படை திரண்டுள்ளது. 10 வருட பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட திமுக இளைஞரணி படை தயாராக உள்ளது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பரித்து வஞ்சிக்கிறது. நீட் தேர்வை ரத்த செய்வதற்காக சுமார் 85 லட்சம் கையெழுத்துகள் பெற்றுள்ளோம்.
நிர்மலா சீதாராமன் கேட்ட மரியாதையை நான் கொடுத்துவிட்டேன்.. ஆனால் நாங்கள் கேட்ட நிதியை அவர்கள் தரவில்லை. நீட் எதிர்ப்பிற்கு டெல்லியிலும் போராட்டம் நடத்த திமுக இளைஞரணி தயாராக உள்ளது. திமுக ஒருபோதும் தொண்டர்களை கைவிடாது. தொண்டர்களுக்கு ஆபத்து என்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் வந்து துணையாக நிற்பார். தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள பாதிப்புக்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழர்களின் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். திமுகவினர் ED, CBI போன்ற எந்த மத்திய புலனாய்வு அமைப்பிற்கும் பயப்பட மாட்டோம்.
இன்னும் 2000 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் கால் பதிக்க முடியாது. தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைத்தால் நீங்கள்தான் அழிந்து போவீர்கள். ஒன்றிய அரசை கேள்வி கேட்டால் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை வருமான வரித்துறை, சிபிஐ வரும் என மிரட்டுகின்றனர். ஒன்றிய அரசின் மிரட்டல்களுக்கு திமுககாரன் மட்டுமல்ல, திமுககாரனின் வீட்டு கைக்குழந்தை கூட பயப்படாது. பெரியார்,அண்ணா,கலைஞர்,கழக தலைவர் என திராவிட இயக்க ஆசிரியர்களின் சுயமரியாதைமிக்க கொள்கை வழியில் பயணித்து சமூகநீதி,மாநில சுயாட்சி உரிமை காப்போம்.
இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி என அனைத்தையும் கழகத் தொண்டர்களாகிய நாம்தான் காப்பாற்ற வேண்டும். இந்தியா கூட்டணியின் வெற்றி இந்தியாவின் வெற்றி. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்காமல், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பாஜக அரசு வழங்குகிறது” என்றார்.