‘கூமுட்டை அண்ணாமலை’ எனக்கூறி தலையில் 150 முட்டைகளை உடைத்து திமுக பிரமுகர் போராட்டம்
தமிழக பாஜக தலைவர் தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு தமிழர்களின் வீரத்தை இழிவுபடுத்தி விட்டதாகவும், அதை கண்டிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் 150-முட்டைகளை தனது தலையில் உடைத்து திமுக பிரமுகர் ராம்பிரகாஷ் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேருந்து நிலையம் அருகில், தமிழக பாஜக தலைவர் திமுகவை வீழ்த்தும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்றதையும், அண்ணாமலை தமிழராய் இருந்து கொண்டு தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு வீரத்திற்கு புகழ் பெற்ற தமிழர்களின் வீரத்தை இழிவு படுத்தி விட்டதை கண்டிப்பதாகவும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலையின் போக்கை கண்டித்து அய்யம்பேட்டை பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலரின் கணவரும் திமுக பிரமுகருமான ராம்பிரகாஷ் என்பவர் தன் தலையில் தானே 150 முட்டைகளை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போக்கை கண்டித்து மக்கள் அதிகம் கூடும் இடத்தில் ஒருவர் தனக்குத்தானே முட்டையால் அடித்துக் கொண்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.