“வில்லிவாக்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடும் திமுகவின் கோட்டை”- கார்த்திக் மோகன்
வில்லிவாக்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடும் திமுகவின் கோட்டையாக தான் இருக்கும் என வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் பிரதான போட்டியாக களம் காணும் தொகுதிகளில் ஒன்றாக வில்லிவாக்கம் மாறியிருக்கிறது. இங்கு தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இவருக்கு போட்டியாக திமுக சார்பில் கார்த்திக் மோகன் களம் காண்கிறார். இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் நெருங்கிய நண்பராவார். அண்மையில் கார்த்திக் மோகனுக்காக சபரீசனே களத்தில் இறங்கி வாக்கு சேகரித்தார். அதிமுக சார்பில் எஸ்.ஆர்.விஜயகுமார் போட்டியிடுகிறார். எனவே இந்த தொகுதியை பொறுத்தவரை மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. இதனால் மூன்று பேரும் தங்களது பலத்தை காட்டும் விதமாக பரபரப்பாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அப்பாதுரை தெரு, பாளையக்கார தெரு, புது தெரு, சிட்கோ நகர் ஆகியபகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் மோகன் , “வில்லிவாக்கத்தில் மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். இப்பொழுது அவர்களது வீட்டிற்கு போகாமல் எம்எல்ஏவாகி எப்படி போகப் போகிறேன். எனவே பரப்புரையிலிருந்து ஒவ்வொரு வீடாக செல்ல தொடங்கி விட்டேன். என்னை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்ஆர் விஜயகுமார் அதிமுகவின் கோட்டையாக வில்லிவாக்கம் மாறும் எனக் கூறியுள்ளார். வில்லிவாக்கம் இப்பொழுதும் திமுக கோட்டையாக தான் இருக்கிறது,இருக்கவும் போகிறது. அதுமட்டுமல்ல தமிழ்நாடும் திமுகவின் கோட்டையாகத்தான் இருக்கும்” என்றார்.



