மனிதநேயம் அற்ற கொடூரச் செயல் - புதுக்கோட்டை சம்பவத்திற்கு கனிமொழி கண்டனம்

 
கனிமொழி

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ரங்கம்மாள் சத்திரம் அருகே பள்ளிக்குச் சென்ற 10 பழங்குடியின மாணவிகளை கூட்டத்தைக் காரணம் காட்டி, அவர்களை ஓட்டுநர் கீழே இறங்க சொல்லியுள்ளார். அவர்கள் மறுத்ததால் ஓட்டுநர் திடீரெனப் பேருந்துக் கதவைத் திறந்துள்ளார். அதில் பயணம் செய்த எட்டுக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, “புதுக்கோட்டை அருகே பள்ளி செல்லும் பழங்குடியின மாணவிகள், அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு, படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, நடத்துநரும் ஓட்டுநரும் மாணவிகளை பேருந்திலிருந்து இறக்கிவிட முயன்றதும், மறுத்த மாணவிகளை கீழே தள்ளிவிட்டதும் மனிதநேயம் அற்ற கொடூரச் செயல்.

கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு, சாதி என்னும் மனநோயால் இச்சமூகம் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம். சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்குவதோடு, உரிய விசாரணை நடத்தி, இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது எந்தவித சமரசமுமின்றி உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.