“திமுக தேர்தல் அறிக்கை நம்முடைய உரிமைகளை பேசக்கூடியதாக இருக்கும்”- கனிமொழி

 
கனிமொழி கனிமொழி

திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு ஒன்றை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக தலைமை அமைத்தது. இந்த குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொது நலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image

அந்த வகையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸில் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. திமுக துணைக் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், சிறு குறு தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு தயாரிப்பு குழுவினரிடம் கலந்துரையாடி தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி. கூறுகையில், மக்களை தேடிச் சென்று அவர்கள் கோரிக்கையை ஏற்று, அதை அறிக்கையாக வெளியிடுவது தான் திமுக.,வின் நோக்கம் என்றும், மக்கள் எதிர்பார்த்ததை உள்ளடக்கிய ஒன்றாக இந்த தேர்தல் அறிக்கை இருக்கும் என்றார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக நம்முடைய அடையாளங்களை எல்லாம் மதிக்கக்கூடிய, பாதுகாக்க கூடிய, உரிமைகளுக்காக பேசக்கூடிய தேர்தல் அறிக்கையாக இது இருக்கும் என கூறிய கனிமொழி, ஓசூர் விமான நிலையம் ரத்து செய்தது தொடர்பாக நடைபெற கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் சார்பாக நாடளுமன்றத்தில் குரல் எழுப்பி மீண்டும் விமான நிலையம் கொண்டு வர முயற்சிப்போம் என்றார். திமுக திட்டங்களை ஜெராக்ஸ் காப்பியாக முன்கூட்டியே 5 தேர்தல் வாக்குறுதியை அதிமுகவினர் கொடுத்துள்ளனர். அதிமுக ஆட்சியில் போட்ட கையெழுத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய முயன்று வருகிறோம்.

Image

மகளிர்க்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்குவது 2018ம் ஆண்டு பிரதமரை அழைத்து வந்து தொடங்கப்பட்ட திட்டம். அதை மீண்டும் இந்த தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள் என்றார். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன், டி.ஆர்.பி. ராஜா, எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டன் ரவீந்திரன், மருத்துவர் எழிலன், நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, திருமதி. தமிழரசி ரவிக்குமார், சந்தானம் ஐஏஎஸ், சுரேஷ்சம்பந்தம் ஆகிய 12 பேர் கலந்துகொண்டு கருத்துக்களை கேட்டனர்.