“ஊரான் வீட்டு நெய்யில் விஜய் காராபூந்தி சுடுகிறார்”- கனிமொழி
தமிழ்நாட்டிற்கு முதலீடு ஈர்க்க வெளிநாட்டுப் பயணம் செல்வதாகச் சொல்லிவிட்டு, லண்டனில் நண்பரின் கார் ரேஸுக்குச் சென்றுள்ளார் முதலமைச்சர் விஜய் என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
தாராபுரம் தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, “அதிமுக வேட்பாளருக்கு பாவம் பார்த்துக்கூட வாக்களிக்க வேண்டாம். ஏனெனில், அவர் எப்போது கட்சி தாவுவார் என்பதே தெரியாது. எடப்பாடி பழனிசாமி போன்றோருக்கு கட்சியின் தலைமை என்ற பொறுப்பு கையில் இருந்தால் போதும்; கட்சியைப் பற்றி கவலைப்படமாட்டார். ஆனால், உறுதியோடு சொல்கிறோம். திமுகவில் இருந்து ஒருவரைக்கூட விலைக்கு வாங்க முடியாது. அந்த அளவிற்குக் கொள்கையோடு இருப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். முதலமைச்சர் தம்பி விஜய் அவர்களே, இந்த ரீல்ஸ்... நாடகம்... சினிமா சூட்டிங் எல்லாம் தமிழ்நாட்டில் ரொம்ப நாளைக்கு ஓடாது. சினிமாவைப் பார்த்து ஏமாந்த காலம் முடிந்துவிட்டது. மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். ‘ஊரான் வீட்டு நெய்யே, உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க’ என திமுக ஆட்சியில் தம்பி விஜய் சொல்வார். ஆனால், இப்போது மேட்டூரில் தண்ணீர் திறந்துவிட ரூ.6 கோடி செலவு செய்கிறார். எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்கிக் கொடுக்கிறார். ரூ.6 கோடி செலவு செய்து புதிய அலுவலகம் கட்டுகிறார். பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆர்., நீங்கள் கைகட்டி நின்ற செல்வி ஜெயலலிதா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆட்சி செய்த தலைமைச் செயலகத்தை மாற்றி, ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுகிறார். இதெல்லாம் யார் பணம்? ஊரான் வீட்டு நெய்யில் முதலமைச்சர் காராபூந்தி சுடுகிறார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடு ஈர்க்க வெளிநாட்டுப் பயணம் செல்வதாகச் சொல்லிவிட்டு, லண்டனில் நண்பரின் கார் ரேஸுக்குச் சென்றுள்ளார் முதலமைச்சர் விஜய். அவரேதான் முதலீடு தமிழ்நாட்டிற்கு வரும் என்று சொன்னார். அவர் சொன்ன முதலீடுகள் எங்கே? இந்தியாவில் இருக்கும் நிறுவனத்திடம் இந்தியாவிலேயே ஒப்பந்தம் போட்டிருக்கலாம். ஆனால், லண்டன் சென்று ஒப்பந்தம் போட்டது ஏன்? முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினால் கூட, செய்தியாளர்களை அனுமதிப்பது இல்லை. தூய கட்சி ஆட்சியில் நாடகம் மட்டுமே நடக்கிறது” என்றார்.

