லண்டனில் கரூரை ரீமேக் செய்ய நினைத்தாரா விஜய்?- திமுக ஐடி விங்

 
ச்

முதலீடுகளை ஈர்க்கச் சென்றீர்களா அல்லது உலக அரங்கில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் நன்மதிப்பைக் குலைக்கச் சென்றீர்களா விஜய்? என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.


இதுதொடர்பாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் மதியம் 12 மணிக்கு நிகழ்ச்சி என்று சொல்லிவிட்டு, கூட்டம் கூட வேண்டும் என்ற காரணத்திற்காக இரவு வந்தது மட்டுமில்லாமல் எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் 41 உயிர்கள் பிரியக் காரணமான விஜய் செய்த செயல், லண்டனில் நடந்த நிகழ்வு கரூர் நிகழ்வை மீண்டும் ரீமேக் செய்ய நினைத்தாரா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஏனென்றால் அங்கும் நடந்ததற்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் பொருந்துவது போல் உள்ளது. லண்டனில் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலில் ரசிகர்களைச் சந்திக்கப் போகிறார் என்ற தகவலைக் கசியவிட்டது மட்டுமில்லாமல், லண்டனில் அனுமதியே இல்லாத ஒரு நிகழ்ச்சியை 4 மணிக்கு என்று பொதுவெளியில் நின்று விஜயின் பாதுகாவலர் சொன்னதை நம்பி அங்கு நடிகரைச் சந்திக்கக் கூட்டம் கூடியுள்ளது. கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளோ பாதுகாப்பு ஏற்பாடுகளோ துளி கூட செய்யவில்லை. பின்னர் எப்போதும் போல கூட்டத்தைக் கூட்டி வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை என்பதால் கலைந்து செல்லுங்கள் என்று ஒரு அதிகாரியை வைத்து அறிவித்துள்ளனர்.

மேலும் நடிகரைப் பார்க்கக் கூடிய கூட்டம், அங்கு எதிரே மருத்துவமனை உள்ளது என்பதையும் பொருட்படுத்தாமல் கோஷமிட்டனர். மருத்துவமனை உள்ளதால் சத்தம் போட வேண்டாம் என லண்டன் காவல் துறை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இது அந்நாட்டு மக்களிடம் நம் நாடு குறித்தோ அல்லது தமிழ்நாடு குறித்தோ என்ன விதமான பார்வையை உருவாக்கியிருக்கும்? முதலீடுகளை ஈர்க்கச் சென்றீர்களா அல்லது உலக அரங்கில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் நன்மதிப்பைக் குலைக்கச் சென்றீர்களா விஜய்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.