திமுகவினர் ஷாக்..! திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செங்கோடு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி விவசாயி. விவசாயி முனுசாமிக்கும், வந்தவாசி தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கமலக்கண்ணனுக்கும் இடையே நிலம் தொடர்பாக பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நில பிரச்சினை தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு மே 15 இல் முன்னாள் திமுக எம்எல்ஏ கமலக்கண்ணனின் ஆட்கள் விவசாயி முனுசாமியை கட்டை மற்றும் அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து முனுசாமியின் மனைவி பொன்னி அளித்த புகாரின் அடிப்படையில், செய்யாறு பகுதிக்கு உட்பட்ட அனக்காவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதை தொடர்ந்து, திமுக முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன், மதியழகன், நந்தகோபால், இருசப்பன், பெருமாள், சுதாகரன் மற்றும் துரைமுருகன் ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.
இன்று இந்த வழக்கில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி மதுசூதனன் குற்றவாளிகளான திமுக முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் உட்பட ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
2014 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைதான திமுக முன்னாள் எம்எல்ஏ-விற்கு 12 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், கடந்த 2006 -2011 திமுக ஆட்சிக் காலத்தில் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினராக ஜெயராமன் பதவி வகித்தார். இவர் திடீரென இறந்தவுடன் இவரது மகன் ஆகிய கமலக்கண்ணனுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் திமுகவின் சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

