இன்று பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு..!

 
1 1

தி.மு.க. தலைமைக்கழம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு வெல்லும் தமிழ் – தென் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாடு என பெயரிடப்பட்டுள்ளது.

1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் தமிழ்நாடு முதல்வர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட - கட்சி துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி , எம்.பி., தலைமையில்; கட்சிப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக மகளிர் அணிச் செயலாளர் திருமதி ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் முன்னிலையில் - கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.வி.செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ., அவர்கள் வரவேற்பில்; வருகிற 29.12.2025 திங்கட்கிழமை, மாலை 4.00 மணி அளவில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.

இம்மாநாட்டினை அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், கா.இராமச்சந்திரன் - மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்களான மேயர் என்.தினேஷ்குமார், என்.நல்லசிவம், தோப்பு வெங்கடாசலம், தொ.அ.ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ்ச்செல்வன், கே.எம்.ராஜு, கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், எம்.பி., கே.எஸ்.மூர்த்தி, - பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.ஈஸ்வரசாமி, எம்.பி., இ.பிரகாஷ், எம்.பி., கணபதி ப.இராஜ்குமார், எம்.பி., - சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், எம்.எல்.ஏ., பெ.இராமலிங்கம், எம்.எல்.ஏ., ஆர்.இளங்கோ, எம்.எல்.ஏ., க.சிவகாமசுந்தரி, எம்.எல்.ஏ., இரா.மாணிக்கம், எம்.எல்.ஏ., ஆகியோர் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்துள்ளனர். நிறைவாக, திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் திருப்பூர் க.செல்வராஜ், எம்.எல்.ஏ., நன்றியுரையாற்றுகிறார். 

இந்த மாநாட்டிற்கு தி.மு.க. மாநில மகளிர் அணி சார்பில் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வரின் உரையில், பெண்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் மகளிர் மத்தியில் நிலவுகிறது.மாநாடு நடைபெறுவதற்காக காரணம்பேட்டை பகுதியில் 29 ஏக்கர் பரப்பளவில் பிரதான மேடை மற்றும் மாநாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாகன நிறுத்தம், பாதுகாப்பு, உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சேர்த்து மொத்தம் 90 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேடை அமைப்பு, அலங்காரம், ஒலிபெருக்கி வசதி உள்ளிட்டவை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் நீலகிரி, நாமக்கல், கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பெண்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 39 சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்து பெண்களை மாநாட்டிற்கு அழைத்து வருவதற்காக, பூத் வாரியாக பெண் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பெண்களை ஒருங்கிணைத்து வருகிறார்கள்.

மாநாட்டில் பங்கேற்கும் பெண்களுக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு கருப்பு–சிவப்பு நிற சுடிதார், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கருப்பு–சிவப்பு நிற சேலை வழங்கப்பட உள்ளது. மேலும், மாநாட்டில் அமர்வதற்கான இருக்கைகளில் 13 வகையான சிட்டுண்டிகள் வைக்கப்படுகின்றன.

பெண்களின் வசதிக்காக மொபைல் கழிப்பறைகள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, தன்னார்வலர்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாடு முடிந்து செல்லும் பெண்களுக்கு இரவு உணவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, மாநாட்டை ஒட்டி பல்லடம் மற்றும் காரணம்பேட்டை பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தனித்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெண்கள் அரசியலில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற தி.மு.க.வின் நோக்கத்தை வெளிப்படுத்தும் மாநாடாக இந்த மேற்கு மண்டல மகளிர் மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.