ஜூன் 20 கலைஞர் கோட்டம் திறப்பு - திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்..

 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவாரூர் காட்டூரில் ஜூன் 20ம் தேதி கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைக்கிறார்;  ஏற்கனவே ஜூன் 15ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில்  துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி,  டி.ஆர்.பாலு,  ஆ.ராஜா,  டி.கே.எஸ். இளங்கோவன்,  தயாநிதிமாறன்,  பொன்முடி,  கனிமொழி கருணாநிதி,   பழனி மாணிக்கம்,  மு.கண்ணப்பன்,  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.சி.பழனிசாமி உள்ளிட்ட   உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர்கள் 25 மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அறிவாலயம்

அதில், 13 தேர்தல்களில் வெற்றி பெற்ற சாதனையாளர்,  தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சாணியாக செயல்பட்ட ,  ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் நலன் கருதி திட்டங்களை வழங்கியவர் கலைஞர் என பாராட்டப்பட்டுள்ளது.  கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடிடும் வகையில்,  ஓர் ஆண்டுக்கு நிகழ்ச்சிகளை திட்டமிட்டு நடத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் ஜூன் 3ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஜூன் 20ம் தேதி திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 15ம் தேதி  குடியரசுத் தலைவரால் திறந்துவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கலைஞர் கோட்ட  திறப்பு விழ  முழு நாள் நிகழ்வாக கவியரங்கம்,  பட்டிமன்றம்,  பொதுக்கூட்டம்  உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற உள்ளதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், ஜூன் 3ம் தேதி வடசென்னையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி  - ஸ்டாலின்

* திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாகவும்,  முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அளப்பரிய சாதனைகளை மக்கள் நெஞ்சில் பதிய வைக்கும் வகையில் இந்த கூட்டங்கள் அமைய வேண்டும்.
* ஜூன் 3ம் தேதி கிளைக்கழகங்கள் தொடங்கி அனைத்து அமைப்புகள் சார்பிலும் கலைஞரின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திட வேண்டும்.
*  75 ஆம் ஆண்டில் திமுக அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் கழக கொடிக்கம்பங்கள் இல்லாத கிராமங்களே  தமிழ்நாட்டில் இல்லை என்கிற பெருமை நிலையை எட்டியிருக்கிறது.  
* ஒவ்வொரு மாவட்டத்திலும்  அரசு விதிகளை பின்பற்றி ‘எங்கெங்கும் கலைஞர்’ என்கிற அடிப்படையில் கலைஞரின் முழு உருவ  மற்றும் மார்பளவு சிலைகளை நிறுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்டாலின்
*  ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் கழக குடும்பங்களை சேர்ந்த 100  மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி உதவித் தொகைகளை வழங்கிடலாம்.  * ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘என்றென்றும் கலைஞர்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம், பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்திட வேண்டும்.
*அவ்வாறு கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் தேதி பட்டியலை மாவட்ட கழக நிர்வாகம் சார்பில் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். என்றும் * ஓராண்டும் முழுவதுமாக கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடிடும் செயல் திட்டத்தினை உருவாக்கி தலைமை கழகத்தின் அனுமதியைப் பெற்று இளைய தலைமுறையினர் பயன்படும் வகையில் நடத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.