முதலமைச்சர் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்..

திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில், திமுகவை சேர்ந்த மூத்த செயல்திட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில் கலைஞருடைய நூற்றாண்டு பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கலைஞருடைய நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல இந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டும் என திமுக தலைமை கழகம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி இன்றைய தினம் நடைபெறக்கூடிய உயர்நிலை செயல் திட்ட குழுவில் கலைஞரின் பிறந்தநாள் விழா, பொதுக்கூட்டங்கள், திருவாரூரில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் பங்கேற்கும் கலைஞர் கோட்டம் திறப்பு விழா என கட்சி சார்பில் முன்னெடுக்கக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் விரிவான ஆலோசனை இன்று நடத்தப்பட இருக்கிறது.
இதில், உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, ஆ.ராஜா, டி.கே.எஸ். இளங்கோவன், தயாநிதிமாறன், பொன்முடி, கனிமொழி கருணாநிதி, பழனி மாணிக்கம், மு.கண்ணப்பன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.சி.பழனிசாமி உள்ளிட்ட 25 மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் ஆகியவை குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.