அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை: பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்திய திமுக அரசு! - ராமதாஸ்..

 
ramadoss

பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அர்ச்சகர்கள் அவமதிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின்படி தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அவமதிக்கப்படுவதாகவும், வழிபாடு நடத்துவதற்கு பதிலாக கோயில்களை தூய்மைப்படுத்தும் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டிய அரசு, இந்த அநீதியை ஊக்குவிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் நியமிக்கப்பட்ட  24 அர்ச்சகர்களில் 10 பேர் தங்களை கருவறைக்குள் செல்ல அங்குள்ள பரம்பரை அர்ச்சகர்கள் விடுவதில்லை; கோயிலை சுத்தம் செய்யும் பணி தான் வழங்கப்படுகிறது; எந்தக் கோயிலுக்கு அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டோமோ, அதை விடுத்து பக்தர்களே வராத கோயில்களுக்கு அனுப்பப்படுகிறோம்; பரம்பரை அர்ச்சகர்கள் எங்களை அவமானப்படுத்துகின்றனர் என்று குற்றஞ்சாட்டியதாக தி டி.ட்டி நெக்ஸ்ட் (DT Next)  இதழில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் செய்தால், அவர்களும் பரம்பரை அர்ச்சகர்களுடன் இணைந்து எங்களை அவமானப்படுத்துகின்றனர்; இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம்  புகார் செய்த போதிலும் அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சாதி அர்ச்சகர்கள் கூறியுள்ளனர். 

கிடப்பில் கிடந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்; 100 நாளில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு

அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளால் முடக்கப்பட்டிருந்த இத்திட்டம்,  வழக்குகள் அனைத்தும் முறியடிக்கப்பட்ட நிலையில், 2021&ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14&ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்தத் திட்டம் தந்தை பெரியாரின் கனவு என்றும், இதன்மூலம் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டதாகவும் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், பல ஆண்டு போராட்டத்திற்கு பிற அர்ச்சகர் ஆக்கப்பட்ட இடைநிலை சாதியினருக்கு உரிய அங்கீகாரத்தையும், மரியாதையையும் பெற்றுத் தர தமிழக அரசு தவறிவிட்டது. இது தான் திமுக அரசின் மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். 

 எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ₹351 கோடிக்கு நிதி விடுவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை..

தமிழக அரசு நினைத்தால், அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில் நியமிக்கப்பட்டவர்கள் தான் கருவறையில் அர்ச்சனை செய்வார்கள் என்று அறிவித்திருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை. இதுதொடர்பாக அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் அளிக்கப்பட்ட புகார்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குக் காரணம் பரம்பரை அர்ச்சகர்களைக் கண்டு அரசு அஞ்சுவது தான். இப்படிப்பட்டவர்கள் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டியதில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு விட்டது என்று ஆட்சியாளர்கள் கூறினார்கள். ஆனால், அனைத்து சாதி அர்ச்சகர்கள் அவமானப்படுத்தப்படுவதை வேடிக்கைப் பார்ப்பதன் மூலம் தந்தை பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு. இதற்கு பரிகாரம் காணும் வகையில், இன்னும் அதிக எண்ணிக்கையில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமித்து அவர்களுக்கு கருவறையில் பூசை செய்யும் அதிகாரத்தை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.