தனது கடைசி முழு பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறது திமுக அரசு!

2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். முதல் முறையாக பொருளாதார ஆய்வு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையில் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தது. சட்டசபையின் அடுத்த கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இந்த பட்ஜெட், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த 2026-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டைதான் இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். எனவே தற்போது தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்தான் கடைசி முழு பட்ஜெட். அதனால் இந்த பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு தீட்டி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே உள்ள திட்டங்களில் அளிக்கப்படும் உதவித் தொகை இந்த பட்ஜெட் மூலம் அதிகரிக்கப்படுமா? உரிமைத் தொகை பெறுவோரின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? இலவசமாக பெண்கள் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக அறிவிப்புகளை வெளியாகும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் நடைபெறுகிறது. அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை எடுக்க வேண்டும்? என்பது உள்பட அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சபாநாயகர் அப்பாவு வெளியிடுவார். பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் மறுநாளில் வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் தாக்கல் செய்வார். அந்த வகையில் வேளாண்மை பட்ஜெட் 15-ந் தேதி (சனிக்கிழமை) தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. வரும் 17-ந் தேதி சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.