"தவெக வழங்குவது ஆட்சியா... க்ரைம் த்ரில்லர் படமா... இது தமிழ்நாடா.. உத்தரப்பிரதேசமா?"- கீதா ஜீவன்

 
குழந்தை திருமணம் நடத்தினால் நடவடிக்கை… அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை!

தவெக வழங்குவது ஆட்சியா... க்ரைம் த்ரில்லர் படமா... இது தமிழ்நாடா.. உத்தரப்பிரதேசமா.. எனக் கேட்கும் அளவுக்கு அடுத்தடுத்து குற்றச் சம்பவங்கள் அரங்கேறுவதால் நெஞ்சம் பதைபதைக்கிறது என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக கீதா ஜீவன் தனது எக்ஸ் தளத்தில், "இது தமிழ்நாடா.. உத்தரப்பிரதேசமா.. தவெக வழங்குவது ஆட்சியா.. க்ரைம் த்ரில்லர் படமா? தவெக ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் போதைப் பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், இரட்டைக் கொலைகள், சிறுமிகள் துன்புறுத்தல் என முற்றிலும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவருகிறது. தவெக வழங்குவது ஆட்சியா... க்ரைம் த்ரில்லர் படமா... இது தமிழ்நாடா.. உத்தரப்பிரதேசமா.. எனக் கேட்கும் அளவுக்கு அடுத்தடுத்து குற்றச் சம்பவங்கள் அரங்கேறுவதால் நெஞ்சம் பதைபதைக்கிறது! வேளாங்கண்ணியில் இரண்டு சிறுமிகள் விடுதியில் அடைத்து வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்குத் தவெக நிர்வாகியால் பாலியல் தொல்லை தரப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்கிற பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு, அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். அவரின் கணவரும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமியின் மகன் பழனி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த கொலைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

அதேபோல, தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பெருங்குற்றங்களுக்குப் பின்னாலும் ஆளும் தவெகவினர் ஒளிந்திருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர் தவெக எம்எல்ஏ, போதைப் பவுடர் பயன்படுத்துபவர் தவெக அமைச்சர், Drug மாஃபியா தவெக மாவட்டப் பொறுப்பாளர்.. Drug மாஃபியாவுக்கு உடந்தையாக இருப்பவர் மாவட்டச் செயலாளர். தற்போது குமரி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர் தவெகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர். 137 கிலோ மெத் போதைப் பொருள் விற்றவர் நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர் பூபாலன். முன்பெல்லாம் 'திருடர்கள் ஜாக்கிரதை' என்றுதான் பதாகைகள் வைப்பார்கள். இப்போது 'தவெகவினர் ஜாக்கிரதை' என வைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.சீன்பேப்பர் பார்த்துப் படித்து நடித்துவிட்டுச் செல்ல, இது ஷூட்டிங் அல்ல.. ஆட்சி! எனவே, சட்டம் ஒழுங்கு, பெண் பாதுகாப்பு, போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு தமிழ்நாட்டைக் காப்பாற்றுங்கள் எனத் தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்துகிறேன்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.