ரூ. 5 கோடி லஞ்சம்... அமைச்சர் ராஜ்மோகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக புகார்
இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் தருவதாக லயோலா மணி தன்னிடம் ஒருவரை அழைத்து வந்ததாகப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயல், இசை, நாடக மன்றத் தலைவர் நியமனத்திற்காக 5 கோடி ரூபாய் வரையிலான பேரம் பேசல்கள் நடைபெற்றதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்த கருத்துகள் குறித்து, சட்ட நடவடிக்கை எடுக்கவும் விசாரணை நடத்தவும் கோரி, திமுக தரப்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திடம் (DVAC) மனு அளிக்கப்பட்டது. அமைச்சர் பேசியதை ஆதாரமாகக் கொண்டு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் தர தயார் என ஒருவர் வெயிட்டிங்கில் இருப்பதாக லயோலா மணி சொன்னதாகவும், அவருக்கு தர முடியாது என மறுத்த அமைச்சர் ராஜ்மோகன், புஷ்பவனம் குப்புசாமிக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் தந்ததாகவும் அரசு விழாவில் குறிப்பிட்டு பேசிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், லயோலா மணி யாருக்கோ இடைத்தரகர் போல செயல்பட்டதாக குற்றம்சாட்டுகிறாரா? 5 கோடி தருவதாக சொன்ன நபரின் பெயரை ஏன் அமைச்சர் வெளியிடவில்லை? அதேபோல், 5 கோடி ரூபாய்க்கு ஒர்த்தான பதவியை காசு வாங்காம குடுத்திருக்கேன் என்று பஷ்பவனம் குப்புசாமிக்கு ஏதோ தகவல் சொல்கிறாரா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

