"ஸ்கிரிப்டை மட்டும் படித்தால் போதுமா? வரலாற்றை படிச்சா தானே தெரியும்.! மக்கள் அவதியைப் பாருங்க விஜய் அண்ணா"- எழிலன்

 
ச்ந்

200 யூனிட் மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரங்களில் தமிழ்நாட்டு மக்களை தவெக அரசு ஏமாற்றுவதாக மருத்துவர் எழிலன் நாகநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் எழிலன் நாகநாதன், “டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் அவசர அவசரமாகக் காரில் ஏறிப் போன முதலமைச்சர் விஜய், இன்று திருச்சியில் பொதுமக்களுக்குப் பதிலாகக் "கேப்டிவ் ஆடியன்ஸ்" (Captive Audience) எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்தை வைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தபிறகு ஊடகவியலாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், முதலமைச்சர் விஜய் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் காரில் ஏறித் தப்பிச் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.அறிஞர் அண்ணா கூறியதைப்போல, "எதிர்க்கட்சியாக இருக்கும்போது கிண்ணத்தை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம்; ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆட்சி என்பது நெய்க்கரண்டியைப் போன்றது, அதனைச் சிந்தாமல் கையாள வேண்டும்". முதலமைச்சர் விஜய் இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே பேசுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கான தெளிவான "விஷன் ஸ்டேட்மென்ட்" (Vision Statement) வழங்க வேண்டும் என டாக்டர் எழிலன் வலியுறுத்தினார்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாதந்தோறும் மின்கட்டணம் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்காமல், இன்னும் இரு மாதங்களுக்கு ஒருமுறைக் கட்டணம் வசூலிப்பதையும், அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதையும் எழிலன் சுட்டிக்காட்டினார். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதில் மக்களை ஏமாற்றாமல், 2006-ல் கலைஞர் அவர்கள் நிபந்தனையின்றி 7,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்த அரசாணையைப் படித்துப் பார்க்குமாறு முதலமைச்சருக்கு அறிவுறுத்தினார்.மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைத் தாம் தொடர்வதாகக் கூறிவரும் முதலமைச்சர், புதியதாகத் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்போகிறார் என்றும் கேள்வி எழுப்பினார். 100 யூனிட் இலவச மின்சாரத்தின் தொடக்கம் 1989-ல் கலைஞர் வழங்கிய இலவச மின்சாரத்தில்தான் உள்ளது என்பதையும் அவர் நினைவூட்டினார்.தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஆணவப்படுகொலைகள் குறித்துக் கேள்வி எழுப்பிய எழிலன், முன்பு திமுகவை நோக்கி விஜய் எழுப்பிய கேள்விகள் இப்போது அவரிடமே "பூமராங்" ஆகத் திரும்பிவருவதாகக் குறிப்பிட்டார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தைவிட "வந்தே மாதரம்" பாடலுக்கு முக்கியத்துவம் அளிப்பதன்மூலம் மாநில உரிமைகளை முதலமைச்சர் விட்டுக்கொடுக்கிறாரா? என்றும், மேகதாது மற்றும் மும்மொழிக்கொள்கை குறித்து அவர் ஏன் மௌனம் காக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.முதலமைச்சர் விஜய் தமது அமைச்சர்களை ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், வெறும் ரசிகர்மன்றத் தலைவராகச் செயல்படாமல் பொறுப்புள்ள முதலமைச்சராகச் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.