ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் - துரைமுருகன் அறிவிப்பு..

ராமநாதபுர மாவட்ட திமுக நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்து வகையில் செயல்பட்டதால் 'ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த 24ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்தில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பயணி போல் நின்றிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவரிடம் 5 கிலோ மெத்தப்பட்டைன் என்ற போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போதைப்பொருளை கைப்பற்றி, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் மேலும் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்து, கடந்த 27ஆம் தேதி அங்கு சென்ற போலீஸார் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள போதை பொருளை கைப்பற்றினர்.
இந்த போதை பொருட்களை ராமநாதபுரத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடந்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மேலும் இருவர் என 3 பேரை கைது செய்து தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திக் சைய்யது இப்ராஹிம், ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை தலைவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் கா.செய்யது இப்புராஹிம், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.