"தவெகவில் 70 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்"- ரகுபதி
திமுகவும் அதிமுகவும் ஒன்று சேர எப்போதும் வாய்ப்பே இல்லை என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, " தவெகவில் 60 முதல் 70 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களில் 60 பேர் ஒன்றுசேர்ந்து அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதை திமுக ஆதரிக்கும். என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். திமுக - அதிமுக சேர்ந்தது என்பது தவெக கிளப்பும் பொய்யான வதந்தி. திமுகவும் அதிமுகவும் ஒன்று சேர எப்போதும் வாய்ப்பே இல்லை. குட்டையை குழப்பி மீன் பிடிக்க பார்க்கிறது தவெக அரசு.
சிறைத்துறை பாதுகாப்பு திமுக ஆட்சியில் சிறப்பாக இருந்தது. இப்போது பாதுகாப்பில்லை என்பதற்கு தவெக அரசாங்கமே ஒப்புக்கொண்டதற்கு சாட்சி தான் அவர்கள் அமைத்த கமிட்டி. புதுக்கோட்டையில் திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் தங்களது ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. திமுக திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது" எனக் கூறியுள்ளார்.

