“ஊழல்... ஊழல்...” என ஆதாரமில்லாமல் பேசி, தி.மு.க மீது அவதூறு- எ.வ.வேலு
தகுதி உள்ளவர்களுக்குத்தான் மதுபான ஆலைக்கு உரிமம் வழங்க முடியும். தகுதி இல்லை என்றால் உரிமத்தை ரத்து செய்யுங்கள் என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “ஊழல் நடந்துள்ளது என்றால் அதற்கு ஆதாரத்தை வெளியிடுங்கள். சட்டப்படி, எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அதைவிட்டுவிட்டு, எப்போது பேசினாலும் “ஊழல்... ஊழல்...” என ஆதாரமில்லாமல் பேசி, தி.மு.க மீது மக்கள் மத்தியில் அவதூறு பரப்பும் செயலில் த.வெ.க ஈடுபட்டு வருகிறது. சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை குறித்து பேசுவதை மறந்து... ஆதாரமில்லாமல் ஆளுங்கட்சியினர் அவதூறு பேசி வருகிறார்கள். இன்றைக்கு சினிமா மானியக் கோரிக்கை மீதான விவாதமா நடக்கிறது? பிறகு எங்கிருந்து சினிமா - டாஸ்மாக் என்று பேசுகிறீர்கள்? இடஒதுக்கீடு என்பது திராவிட கட்சியின் தொடக்கமான நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு வந்த கழக ஆட்சியில்தான் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இஸ்லாமியர்களுக்கு 3.5% சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுத்ததும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தான்” என்றார்.

