பேனா சிலை அவசியமா என ஸ்டாலின் கேட்டார் - எ.வ.வேலு
கடலில் பேனா சிலை வைப்பது தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் பேசியதற்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.
அரசு கஜானாவில் பணமில்லை, அதனால் MLA-க்களுக்கு கார் கொடுக்க வேண்டாம் என்று திமுகவினர் சொல்கிறார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் கலைஞருக்கு கடலில் பேனா வைக்க வேண்டும் என்று சொன்னீர்களே, அப்போது மட்டும் நிதி இருந்ததா? என அமைச்சர் அருண் ராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “கலைஞர் நினைவாக பேனா சிலை வைக்க இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் கோரிக்கை வைத்தனர்.கடலில் பேனா சிலை வைக்க ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதியும் கோரப்பட்டது. ஒன்றிய அரசு கலைஞருடைய பேனா சிலையை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி தந்தது. ஆனால், எங்களுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சூழலில் அது தேவையா? என்று கேட்டதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பொருளாதாரம் எப்போது சீர் ஆகிறதோ... அப்போது வைத்துக் கொள்ளலாம். தற்போது வேண்டாம் என்று சொன்னார். இது அனைவரும் அறிந்தது.
திமுக ஆட்சியில் தான் தலீத்துகளுக்கு எதிராக கொடுமைகள் அதிகம் நடந்ததாக நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது முற்றிலும் தவறானது. தலீத்துகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் உ.பி தான் 71,000 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 8,110 வழக்குகளுடன் 10 வது இடத்தில் தான் உள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததற்கு இதுவே சான்று” என்றார்.

