"எந்த குற்றமும் செய்யாதவன் நான்.. திட்டமிட்டு தவெக அரசு என்னை இதில் இணைத்துள்ளது" - எ.வ.வேலு
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு என புகார் குறித்து சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்காக ஆஜரானார். எ.வ.வேலுவிடம் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலை அமைக்காமலேயே அமைத்ததாக கூறி ரூ.3.23 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக எ.வ.வேலு உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஜூன் 25ஆம் தேதி எ.வ.வேலு வீடு உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் காலை 11 மணி முதல் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்தேன், மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வருவேன். என் மனதுக்கு பட்டதை உண்மையை சொல்லிவிட்டு வந்தேன். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன். அம்பு எய்தவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள், காவல்துறையினர் வெறும் அம்புதான், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.எந்த வித குற்றமும் செய்யாதவன் நான்... த.வெ.க அரசு திட்டமிட்டு என் மீது வழக்கு பதிவு செய்துள்ளது” என்றார்.

