தென்காசி, நெல்லை நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

 
meeting

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தென்காசி மற்றும் திருநெல்வேலி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது. திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 

Image

முதலில் தென்காசி மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனையில் ஈடுபட்டது. அதில் மாவட்ட, ஒன்றிய அளவில் உள்ள பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற இணைந்து பணியாற்ற வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது. மேலும் தென்காசி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமாருக்கு நிர்வாகிகள் ஆதரவாக இருப்பதாக தெரிவித்தனர். இரண்டாவதாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் களைந்து நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து செயல்பட்டு தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும் எனவும் ஆளும் கட்சியாக இருந்து 40 தொகுதியிலும் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Image

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது வெள்ள நிவாரண தொகை 6000 ரூபாய் தமிழ்நாடு அரசு வழங்கியிருந்தது. அதை பெறாத மக்களின் பட்டியலை பெற்று மாவட்ட செயலாளர்கள் மூலம் கட்சி தலைமை இடத்திற்கு தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவுறுத்தி உள்ளது. வெள்ள நிவாரண நிதி உதவி வழங்கியதால் மீண்டும் திமுகவிற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பு அதிகரித்து உள்ளதாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.