திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவின் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
2026-ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை எதிா்கொள்ளும் வகையில் திமுக தனது தேர்தல் பணிகளை தொடங்கும் விதமாக திமுக ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆா்.எஸ்.பாரதி, அமைச்சா்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். இந்த 5 பேர் கொண்ட குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து திமுக ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது. அதில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் குறித்தும், திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள் குறித்தும், நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்தும் முதற்கட்ட ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த கூட்டத்தில் விரிவான ஆலோசனைகள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.