“ஜனநாயகத்தைக் கடைப்பிடியுங்கள், போதிக்காதீர்கள்”... பாஜகவுக்கு திமுக அட்வைஸ்

 
பதவியை பறிக்கொடுக்கப்போகும் அமித்ஷா!

ஒன்றிய அரசுக்கு உண்மையாகவே ஜனநாயக உணர்வு இருக்குமானால், எதிர்க்கட்சியினர் அவையினில் இல்லாதபோது புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றியிருக்கக் கூடாது என திமுக கூறியுள்ளது.

அண்ணாமலை அமித்ஷா

இதுதொடர்பாக தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் திரு. என்.ஆர்.இளங்கோ தனது ட்விட்டரில், “மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள், "புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதன் செயல்முறையும் தமிழில் நடைபெறும். தமிழ்நாடு முதலமைச்சரோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ இவற்றின் பெயர்களுக்கான அவர்களின் எதிர்ப்பு குறித்து கலந்தாலோசிக்க நேரம் கோரவில்லை. நான் அவர்களிடம் மீண்டும் கூறிக்கொள்கிறேன். உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் என்னைச் சந்தியுங்கள். சட்டங்களைப் புறக்கணிப்பது சரியாகாது" என்று இச்சட்டங்கள் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சேபணை தொடர்பாகக் கருத்து தெரிவித்திருப்பதாக, 'தி இந்து' ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது.

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயரிடுவதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோம். இச்சட்ட முன்வடிவுகள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, நாடாளுமன்ற அவைக்குள் நடந்த அத்துமீறல் குறித்து எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒன்றிய அரசுக்கு உண்மையாகவே ஜனநாயக உணர்வு இருக்குமானால், எதிர்க்கட்சியினர் அவையினில் இல்லாதபோது இந்தச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கக் கூடாது. ஜனநாயகத்தைக் கடைப்பிடியுங்கள், போதிக்காதீர்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.