“விஜய் இதுவரை யார்கிட்டயும் மாட்டவில்லை தற்போது பாஜகவிடம் மாட்டியுள்ளார்”- துரைமுருகன்
விஜய் இதுவரை யார்கிட்டயும் மாட்டவில்லை தற்போது பாஜகவிடம் மாட்டியுள்ளார் என அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லம் அமைந்துள்ள காட்பாடி பகுதியில் கருப்பு கொடி ஏற்றி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “தொகுதி மறுவறைக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதிமுக பாஜக தலையில் மாட்டிக் கொண்டு உள்ளனர். விஜய் இன்னும் யார்கிட்டயேயும் மாட்டவில்லை, தற்போது மாட்டி உள்ளார். தொகுதி மறுவரையறையின் அதாவது இதனுடைய உள்நோக்கம் என்னவென்றால், எந்த மாநிலத்தினுடைய தயவும் இல்லாமல் சட்டங்களை இயற்றவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு தானே முடிவு செய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டாட்சி தத்துவத்தை (Federal State) இல்லாமல் செய்து, ஒற்றையாட்சி முறைக்கு (Unitary State) நாட்டை மாற்றப் பார்க்கிறார்கள். இதனால் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு சர்வாதிகாரியாக இருக்கப் பார்க்கிறார்கள்.
அதாவது தொகுதி மறுவரையறை மூலமாக யாருடைய தயவும் இல்லாமல் மத்திய அரசு தாராளமாக ஆளலாம் என்று ஒரு சூழலை எடுத்து இருக்கிறார்கள். அப்படி வந்தால் மக்களுடைய நிலைமை என்ன ஆகும் என்று கேட்கிறீர்கள். நிலைமை என்னவென்றால், மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். மக்கள் பெரிய அளவில் போராடுவார்கள்” என்று கூறினார்.


