திமுக கவுன்சிலர்கள் வரும் 31-ம் தேதி உண்ணாவிரதம்! பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

 
கவுன்சிலர்கள்

கடலூரில் மாநகராட்சியில் 10 திமுக வார்டுகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதால் ராஜினாமா செய்ய உள்ளோம் என கவுன்சிலர்கள் அறிவித்துள்ளனர்.

கடலூர் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த சுந்தரி ராஜா செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மொத்தம் 45 வார்டு உறுப்பினர்களை கொண்டது. இதில் கடலூர் மேயர் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் ஒரு அணியாகவும், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். மேயர் தேர்தலின் போது இரண்டு திமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற சுந்தரி ராஜா கடலூர் மாநகர மேயராக செயல்பட்டு வருகிறார். 

இந்த நிலையில் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக எம்எல்ஏ ஆதரவு கவுன்சிலர்களான 10 பேரும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ ஆதரவு திமுக கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயகுமார், ராதிகா பிரேம்குமார், கர்ணன், பாரூக் அலி , கீர்த்தனா ஆறுமுகம் ஆகிய 10 திமுக கவுன்சிலர்கள் கடலூர் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜிடம் மனு அளித்தனர். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக கவுன்சிலர்கள், “கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் ஏற்பட்ட ஒரு சில மன வருத்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இன்று வரை 2, 3, 8, 15, 35, 40, 41, 43, 44, 45 ஆகிய 10 வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இதுநாள் வரை எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து தராமல் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக கேட்டால் எங்களை அவமானப்படுத்தி வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருவதால் தமிழக முதலமைச்சர், விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தவறும் பட்சத்தில் எங்கள் மாநகராட்சி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளோம். மேற்கண்ட கவுன்சிலர்கள் திமுக பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும், பலமுறை கவுன்சிலராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். 

இந்த நிலையில் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 31-ஆம் தேதி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது‌. இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். மேலும் எங்கள் பகுதிகளை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? என தெரியப்படுத்த வேண்டும்” என்றார்.