சிவகாசியில் மன்னராட்சி நடக்கிறதா..? - ஆவேசமடைந்த திமுக கவுன்சிலர்கள்

சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில், துணைமேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், அனைத்து கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களுடன், மாநகராட்சி அலுவலர்களும் கலந்து கொள்ள நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியது முதலே வீட்டு மனை அங்கீகாரம் வழங்க கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் வாதங்களை முன்வைத்து பேசிக் கொண்டிருந்த போதே, பிரச்சனைகள் அதிகரித்துக்கூடிப் பெரிதாகும் என எண்ணிய மேயர் சாதாரண கூட்ட பொருளிலிருந்த 98- தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்து மாமன்ற கூட்ட அரங்கினுள்ளிருந்து வெளியேறினார். ஆனால் துணை மேயர் விக்னேஷ் பிரியாவும், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியும் கூட்ட அரங்கம் மேடையில் அமர்ந்திருந்தனர்.
தொடர்ந்து கூட்டத்தை நடத்த வேண்டுமென மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அப்போது கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பின்பு வீட்டு மனை அங்கீகாரம் வழங்க வேண்டுமென மாமன்ற உறுப்பினர்கள் கூறினர், மாமன்ற உறுப்பினர்கள் அவமதிக்கப்படுவதாகவும், மன்னராட்சி போல மாமன்ற கூட்டம் நடப்பதாகவும் ஆவேசமாக பேசியதுடன், ஆணையாளரை சிறைபிடித்து முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததுடன் மாமன்ற கூட்டரங்கினுள் உள்ளிருப்பு போராட்டத்திலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடத்தினர். சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்ளும் மேயர் தங்களுக்கு வேண்டாம் எனவும், கூட்டம் தொடர்ந்து நடைபெறவிடில் சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும் மாமன்ற உறுப்பினர்கள் எச்சரித்தனர்.
மாமன்ற உறுப்பினர்களை அரசு அலுவலர்கள் உட்பட பலரும் சமரச படுத்தி பேசியதையடுத்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களும் கூட்டரங்கினிலிருந்து வெளியேறி மாநகராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து மேயருக்கு எதிராக கண்டன கோஷங்களை முழக்கங்களாக எழுப்பினர்.