இலவசமாக சிக்கன் வறுவல் கேட்டு தகராறு- திமுக கவுன்சிலர் மீது தாக்குதல்

சங்கரன்கோவில் சிக்கன் கடையில் ஏற்பட்ட சண்டையில் நகர் மன்ற உறுப்பினர் மீது மதுபாட்டிலால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் ஐந்தாவது வார்டு நகர் மன்ற உறுப்பினராக இருக்கும் ராஜா ஆறுமுகம் பேருந்து நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.(திமுகவின் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்). அவரது தம்பி மாரிமுத்து அருகே சிக்கன் கடை வைத்து நடத்தி வருகிறார். ஆதம்பாவா என்பவர் சிக்கன் கடைக்கு சென்று இலவசமாக சிக்கன் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது பழைய பாக்கி தொகையை கேட்டதால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆதம்பாவாவுடன் வந்த 2 பேரும் அவரது சகோதரர் இஸ்மாயில் சென்றபோது மேலும் வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறி உள்ளது. இதற்கு இடையில் சிக்கன் கடை நடத்தி வரும் மாரிமுத்துவின் சகோதரர் ராஜா ஆறுமுகம் தடுக்கச் சென்றபோது அவரது தலையில் மது பாட்டிலை வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜா ஆறுமுகம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக் சிசிடிவி கேமராவில் காலையில் அடிதடி ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி இருவரை பிடித்து சங்கரன் கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.