"ஆபாச குறுஞ்செய்தி உண்மை என்றால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்"- தவெக எம். எல். ஏ. மீது திமுக புகார்
கள்ளக்குறிச்சி தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பிடம் புகார் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், "த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக் கேடான விஷயம்.. அமைச்சர் ராஜ்மோகன் சொல்வது போல, அந்த எம்.எல்.ஏ. மீது ஆட்சியர் புகாரளித்தால் இந்த மாநிலத்தில் அவர் இருக்க முடியுமா? எதற்கெடுத்தாலும் திமுக என சொல்வதற்கு ஏன் ஆட்சியில் இருக்கிறீர்கள்? தவெக திறனற்ற அரசாங்கமாக இருக்கிறது. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலை.? கள்ளக்குறிச்சி MLA மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாச குறுஞ்செய்தி உண்மை என்றால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்" என்றார்.

