அனைவருக்கும் மினரல் வாட்டர், இலவசமாக JCB, ஹிட்டாச்சி- வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக வேட்பாளர்

 
s

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு ஜேசிபி, ஒரு ஹிட்டாச்சி இயந்திரம் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி அளித்துள்ளார்.


தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். கதிரவன், திருப்பட்டூர், எதுமலை, ஓமாந்தூர், எஸ்.மேட்டூர், வலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பிலும், நடைபயணமாகவும் சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு “உதயசூரியனுக்கு வாக்கு அளியுங்கள்” என முழக்கமிட்டனர். வேட்பாளர் கதிரவனுக்கு அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து ஆதரவை தெரிவித்தனர்.

தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய திமுக வேட்பாளர் கதிரவன், ““என்றும் நன்றி உணர்வுடனும், நேர்மையுடனும் செயல்படுவேன்,” கடந்த ஐந்து ஆண்டுகளில் திருப்பட்டூர் ஊராட்சியில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும் எதுமலையில் 8.19 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் வரதராஜபுரம் காலணியில்  1 கோடி 9 லட்சம் மதிப்பில் இப்பகுதியில் மட்டும் சுமார் 35 கோடி மதிப்பிலான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேல்நிலை நீர் சேமிப்பு தொட்டிகள், 8 பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள், கழிவுநீர் வடிகால் அமைப்புகள், குடிநீர் திட்டங்கள், 11 சிமெண்டு சாலைகள் மற்றும் 1 தார் சாலை உள்ளிட்ட மொத்தம் 51 பணிகள் ரூ.4.13 கோடி மதிப்பில் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் 2021 முதல் 2026 வரை 7,818 பேருக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு யூனியனுக்கும் இலவசமாக JCB மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்கள் வழங்கப்படும். உப்புத்தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக ஒவ்வொரு ஊராட்சியிலும் மினரல் வாட்டர் பிளாண்ட் அமைக்கப்படும், ஏரிகளை நிரப்பி விவசாயத்திற்கு தேவையான பாசன வசதி ஏற்படுத்தப்படும். நான் செய்யக்கூடியவற்றை மட்டுமே வாக்குறுதி அளிப்பேன்,  முடியாதவற்றை சொல்லி ஏமாற்ற மாட்டேன். வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி பதில் அளித்து வருகிறேன்” என்றார்.