ஆளுநர் தேநீர் விருந்து - திமுக புறக்கணிப்பு..
ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.
நாட்டின் 78வது சுதந்திர தினம் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி தமிழக ஆளுநர், அனைத்துக் கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வைக்க உள்ளார். இதனையடுத்து இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக , விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் தற்போது ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுகவும் அறிவித்துள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார். மேலும் அரசு சார்பில் கலந்துகொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை முடிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.