வெறும் வாய் வார்த்தைகளில் மட்டும் சமூகநீதி பேசி பட்டியல் சமூக மக்களை ஏமாற்றி வருகிறது திமுக - அண்ணாமலை..!

 
1

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் மனித கழிவு கலக்கப்பட்டது. மனித கழிவு கலக்கப்பட்ட நீரை குடித்த பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதத்தன்மையற்ற குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கை தற்போது சிபி-சிஐடி போலீசார் விசாரிக்கிறார்கள்.

மனித கழிவு மாதிரியிலிருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ-வை, சந்தேகத்தின் அடிப்படையில் 30 நபர்களிடம் எடுக்கப்பட்ட டி.என்.ஏ-வுடன் ஒப்பிட்டு பார்க்கையில் ஒத்துப்போகாததால் குற்றவாளிகள் யார் என்பது கண்டுபிடிக்க முடியாமல் மர்மம் தொடர்கிறது.

குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என வேங்கைவயல் கிராம மக்கள் வலியுறுத்தியும் இன்று வரை யார் என கண்டுபிடிக்கமுடியாததால் மக்களவை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைந்துள்ள இடத்தில் அக்கிராம மக்கள் பேனர் ஒன்று வைத்துள்ளனர். அதில், “குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததற்கு இன்று வரை நீதி கிடைக்காததால் தேர்தல் புறக்கணிக்கிறோம்”, என பேனரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது ’எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

”ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாமல், கண்துடைப்பு விசாரணை நடத்தி, கிட்டத்தட்ட அந்த சம்பவத்தைப் பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைக்க முயற்சித்து வருகிறது திமுக அரசு. இதனைக் கண்டித்து, வேங்கைவயல் மக்கள், தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். வெறும் வாய்வார்த்தைகளில் மட்டும் சமூகநீதி பேசி, இத்தனை ஆண்டுகளாகப் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றி வரும் திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலும், கையாலாகாத்தனமுமே இதற்கு ஒரே காரணம். வேங்கைவயல் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்தும், அங்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் கூறக் கூட மனமில்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பட்டியல் சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கும் திமுகவுக்கு, சமூகநீதி என்ற வார்த்தையை உச்சரிக்க என்ன தகுதி இருக்கிறது? வாக்களிப்பது குடிமக்களின் ஜனநாயக உரிமை. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, தேர்தலைப் புறக்கணிக்கவிருப்பதாக வேங்கைவயல் மக்கள் அறிவித்திருப்பது, மிகவும் வருத்தத்திற்குரியது. வேங்கைவயல் மக்கள், மாற்றத்திற்காக வாக்களிக்க முன்வர வேண்டும். தங்கள் வாக்குகளின் வலிமையை திமுக அரசுக்கு உணர்த்துவதுதான் உண்மையான பதிலடியாக இருக்கும்.