“இந்தியை கொண்டு 56 மொழிகளை அழித்துவிட்டார்கள்”- அன்பில் மகேஷ் சொன்ன புதிய தகவல்

 
anbil magesh

இந்தியாவில் உள்ள 56 மொழிகளை இந்தியை கொண்டு அழித்தது போல் மற்ற மொழிகளையும் அழிக்க பார்க்கிறார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

அன்பில்


திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழ்நாட்டு மாணவர்கள் உலக அளவில் சாதித்து வருகிறார்கள். இந்த கல்வித் திட்டத்தின் மூலமே அது சாத்தியமாகியுள்ளது என்பதை அவர்கள் உலக அளவில் நிரூபித்தும் வருகிறார்கள். கல்வி என்பது ஒத்திசைவு பட்டியலில் உள்ளது. அப்படி இருக்கும் பொழுது புதிய கல்விக் கொள்கையை வரையறும்பொழுது தமிழ்நாட்டின் அரசின் ஆலோசனைகளை ஒன்றிய அரசு கேட்கவில்லை. நம் மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை நமக்குத் தான் தெரியும். மற்ற மாநிலங்களை ஒன்றிய அரசு மிரட்டிய காரணத்தாலே அவர்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டோம் என கையெழுத்து போட்டு உள்ளார்கள். ஆனால் அவர்கள் மிரட்டல் தமிழ்நாட்டில் எடுபடாமல் போன காரணத்தினால் வெவ்வேறு காரணங்களை ஒன்றிய அரசு கூறுகிறார்கள்.

இந்தியை படித்தால் என்ன பிரயோஜனம் உள்ளது? உலகில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களும் ஆங்கிலத்தில் தான். தாய் மொழியில் சிந்திக்க முடியும் உலக மொழியான ஆங்கிலம் தெரிந்து கொண்டால் தான் உலகில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்ள முடியும். 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் கலைஞர் கூறியது. ஆனால் ஒன்றிய அரசு இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். இந்தியை கொண்டு  56 மொழிகளை அழித்துவிட்டார்கள். இருக்கும் மொழியை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக எல்லா மொழிகளையும் அழித்து ஒரு கட்டத்தில் இந்தி தான் ஆட்சி மொழி என கூறுவார்கள்” என்றார்.