விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி தேமுதிக மனு

 
தேமுதிக

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு அலுவலகத்தில் தேமுதிக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

தேமுதிக வழக்கறிஞர் ஜனார்த்தனன் தலைமை செயலகத்தில் உள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜனார்த்தனன், “விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது திமுக அமைச்சர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் புகுந்தனர்.மாவாட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தொலைபேசியில் ஆளும் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வந்தனர்.வலு கட்டாயமாக இரவு நேரத்தில் வாக்கு எண்ணிக்கையின்  போது தேமுதிகவினரை வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேற்றினர். 4379 வாக்குகள் கூடுதலாக  பெற்று மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதாக கூறுவது சந்தேகம் வருகிறது

12 மணி முதல் 1 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூரை விட தேமுதிக வேட்பாளர் 1,0000 வாக்கு அதிகமாக இருந்தார்.
திமுக அமைச்சர்கள் வாக்கு எண்ணும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமைச்சர்கள் வந்து சென்ற பிறகு தேமுதிக வேட்பாளர் வாக்கு எண்ணிக்கை குறைய துவங்கியது.தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்  ஈடுபட்ட அதிகாரிகள் மீதே சந்தேகம் உள்ளது.தேமுதிக வேட்பாளர் தரப்பில் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் கூறியும்  நடவடிக்கைகள் எடுக்கவில்லை.தேர்தல் நடத்தை விதி 63படி விருதுநகர் தேர்தல் முடிவை நிறுத்தி வைத்து முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்” என்றார்.