தவெக எம்எல்ஏவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்
அரசியல் தலையீடின்றி வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்! குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டமன்ற உறுப்பினரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தளத்தில், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் மீது, மாவட்ட ஆட்சியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஒரு மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள பெண் மாவட்ட ஆட்சியருக்கே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்னவாகும்? பெண்களை மதிக்கும் அரசு என்று கூறிக்கொள்ளும் தமிழக அரசின் செயல்பாடு இவ்விவகாரத்தில் கேள்விக்குறியாகியுள்ளது. பெண்களைத் தனது தாய், தங்கை, அண்ணன் எனப் போற்றிப் பேசும் முதலமைச்சர், ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த பிறகும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் படை' எனத் திட்டங்களை அறிவிப்பதால் மட்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைத்துவிடாது. ஒரு மாவட்டத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவினால், இந்தத் திட்டங்களால் என்ன பயன்? எனவே, இக்குற்றச்சாட்டுகள் குறித்து எவ்வித அரசியல் தலையீடும் இன்றி நேர்மையான, வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும். குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்வதுடன், அவர் வகிக்கும் அனைத்துப் பொறுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும். பெண்களின் பாதுகாப்பையும், அரசு அதிகாரிகளின் கண்ணியத்தையும் உறுதி செய்வது தமிழக அரசின் தலையாய கடமையாகும். ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், ஒட்டுமொத்தப் பெண்களும் இந்த அரசின் மீதும், காவல்துறை மீதும் வைத்துள்ள நம்பிக்கை முற்றிலும் சிதைந்துவிடும். எனவே, தமிழக முதலமைச்சர் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்."எனக் குறிப்பிட்டுள்ளார்.

