“பெற்ற தாய் குறித்து பொதுவெளியில் பேசுவதா? அடுத்தவங்க முதுகை சொரியும் முன் உங்கள் முதுகை பாருங்கள்”- ஆ.ராசாவுக்கு பிரேமலதா கண்டனம்
அமைச்சர் பதவிக்காகவே தி.மு.க. கூட்டணியில் இருந்து வி.சி.க. விலகியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது என்பதால் திருமாவளவனின் நிலைப்பாடு மாறியிருக்கிறது. அமைச்சர் பதவிக்காகவே தி.மு.க. கூட்டணியில் இருந்து வி.சி.க. விலகியது. நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு மற்றவர்களை குற்றம்சாட்டுவது மிக மிக தவறு. இடதுசாரிகளும் தவெக அரசுக்கு ஆதரவு தந்தார்கள், ஆனால் அமைச்சர் பதவி வேண்டாம் என்றார்கள். சகோதரர் வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால், கூட்டணி மாறிவிட்டீர்கள். குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வதுபோல திருமாவளவனின் பேச்சு உள்ளது. சட்டமன்ற தேர்தலில் வி.சி.க.வுக்கு 2 தொகுதிகள் கூடுதலாகவே தி.மு.க. வழங்கியது. இடைத்தேர்தலில் திமுகவுக்குதான் ஆதரவு, திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்வேன்
ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசிய தி.மு.கவினர் மீது வழக்கு பதிந்தது சரியானது தான்... நிர்மல் குமார் அம்மா என்ன பண்ணாங்க.? எதுக்கு அவங்க அம்மாவ பத்தி பேசுனீங்க? அடுத்தவங்க முதுகை சொரியும் முன் உங்கள் முதுகை பாருங்கள்.. பெற்ற தாய் குறித்து பொதுவெளியில் பேசும் உரிமை யாருக்கும் கிடையாது.பேசிய அவரையும் பெற்றெடுத்தது ஒரு தாய்தான். அதற்கு எனது கடுமையான கண்டனங்கள். மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக, வாய்க்கு வந்தபடி என்னென்னவோ பேசக் கூடாது. அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்தது சரியான முடிவுதான். வார்த்தைகள் என்றைக்கும் மாறாது, வரலாறும் மாறாது... சிம்பிளா ஒரு வார்த்தை சொல்லிட்டு போய்டுவேன், யாரையும் காயப்படுத்தக்கூடாதுன்னு என்னோட வார்த்தைகளை பார்த்து பயன்படுத்துறேன். முதல்வர் லண்டன் பயணத்தில் நீங்க என்னலாம் பார்த்தீங்களோ... நானும் அதையெல்லாம் பார்த்தேன்” என்றார்.

