“விசில் சத்தத்திற்கு ஏமாறாதீர்கள்..”- பிரேமலதா தீவிர பரப்புரை

 
திமுக வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்த பிரேமலதா

விசில் சத்தத்திற்கு ஏமாறாதீர்கள், முரசு சின்னத்திற்கு வாக்களியுங்கள்  என ஓமலூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து தேமுதிக  பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.

“அண்ணனுக்காக அவரது சகோதரி நான் இங்க வந்திருக்கிறேன்”- ஸ்டாலினுக்காக வாக்கு சேகரித்த பிரேமலதா விஜயகாந்த்


சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று  மாலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மோரூர்  , தீவட்டிப்பட்டி , சின்னத்திருப்பதி , ஓமலூர் பேருந்து நிலையம் , கருப்பூர் ஆகிய இடங்களில் தேர்தல் பரப்புரை செய்தார்.  அப்போது அவர் பேசும்போது, ​முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஒரு மகத்தான கூட்டணி. இந்த தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி  வெற்றிப்  பெற்று, அண்ணன் ஸ்டாலின் 2-வது முறையாக மீண்டும் முதலமைச்சராவார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஓமலூர் தொகுதி மக்களுக்கு முழுமையாக கிடைத்திட  தேமுதிக பாடுபடும்.

​அதிமுக எம்.எல்.ஏ வாக உள்ள  மணி, இந்த ஐந்து ஆண்டுகளில்,தனக்கு  வாக்களித்த மக்களுக்கு நன்றி கூட கூறவில்லை. தொகுதிப் பக்கம் வார்த்தை, எம்.எல்.ஏ அலுவலகத்தை கூட திறக்காமல் மக்களை உதாசீனப்படுத்தியதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றால் ஓமலூர் தொகுதியை தமிழ்நாட்டிலேயே சிறந்த தொகுதியாக மாற்றுவார் என குறிப்பிட்ட அவர், கேப்டன் பெயரில் இலவசக் கணினி மற்றும் ஏ.ஐ . பயிற்சி மையம் அமைக்கப்படும். வேளாண் கல்லூரி மற்றும் அதிநவீன நூலகம் உருவாக்கப்படும். தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் காவிரி உபரி நீரால் நிரப்பப்படும். தரமான குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். பெண்கள் இரவு நேரங்களில் அச்சமின்றி நடமாட போலீஸ் ரோந்து பணிகள் அதிகரிக்கப்படும். மக்களின் குறைகளை தீர்க்க முழுநேர சட்டமன்ற அலுவலகம் செயல்படும் என்றார்.  மேலும், தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக விமர்சனம் செய்த அவர், தற்போது புதிதாக ஒருவர் விசில் அடித்துக் கொண்டு வந்துள்ளார். அந்த சத்தத்திற்கு மக்கள் யாரும் ஏமாந்து விட கூடாது. மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும், வரும் 23-ம் தேதி வாக்குப் பதிவு  இயந்திரத்தின் முதல் பட்டனை அழுத்தி முரசு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தேமுதிக-வை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் வீரபாண்டி திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். தருண் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்..