கூட்டணி குறித்து முடிவெடுத்துவிட்டேன் - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
கடலூர் மாவட்டம் பாசாரில் தேமுதிக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
இந்த மாநாட்டைச் சிறப்பிக்கத் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பிரேமலதா விஜயகாந்த் தனது நெஞ்சார்ந்த வணக்கங்களைத் தெரிவித்தார். மாநாட்டிற்காக அயராது உழைத்த நிர்வாகிகள் மற்றும் நிதி உதவி அளித்தவர்களுக்கு நன்றி பாராட்டிய அவர், ரசிகர் மன்றமாகத் தொடங்கி இன்று மாபெரும் அரசியல் கட்சியாகத் தேமுதிக வளர்ந்திருப்பதை நினைவுகூர்ந்தார். கடலூர் மாவட்டம் விஜயகாந்தின் அசைக்க முடியாத கோட்டை என்பதால், இந்த முறை இங்கு மாநாட்டைத் திட்டமிட்டதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
விஜயகாந்த் இல்லாமல் நாம் யாரும் இல்லை; அவர் இப்போதும் நம்முடன் இருந்து நம்மை வழிநடத்துகிறார்" என்று உணர்ச்சிகரமாகப் பேசிய பிரேமலதா, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் மக்களுக்கானவை என்று உறுதியளித்தார். தேமுதிக-வுக்கு இணையான கட்சி தமிழகத்தில் வேறெதுவும் இல்லை என்றும், தொண்டர்கள் தங்கள் சொந்தச் செலவிலேயே திரண்டு வந்துள்ளது இது பணத்திற்காக வந்த கூட்டம் அல்ல, விஜயகாந்த் மீதான அன்புக்காகச் சேர்ந்த கூட்டம் என்பதை நிரூபித்துள்ளதாகவும் அவர் பேசினார்.
தேமுதிக-வின் அரசியல் எதிர்காலம் குறித்து எதிர்மறையாகப் பேசியவர்களுக்கு இந்த மாநாட்டின் கூட்டமே ஒரு தகுந்த பதிலடி என்று பிரேமலதா குறிப்பிட்டார். தேசத்திற்கு உண்மையாக உழைக்கும் கட்சி தேமுதிக என்பதைத் தொண்டர்கள் மீண்டும் நிலைநாட்டியுள்ளனர். மேலும், தேர்தல் நேரத்தில் 'பேரம் பேசுகிறார்கள்' என்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தான் எப்போதுமே தனது நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமுமே பேரம் (கலந்தாலோசனை) பேசுவதாகக் கூறி விமர்சகர்களின் வாயடைக்கச் செய்தார்.
தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று சூளுரைத்த பிரேமலதா, வரும் தேர்தலுக்கான கூட்டணி குறித்துத் தான் ஏற்கனவே ஒரு தெளிவான முடிவை எடுத்துவிட்டதாக அறிவித்தார். இருப்பினும், ஆளும் கட்சியோ அல்லது ஆண்ட கட்சியோ இதுவரை கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், தானும் அவசரம் காட்ட விரும்பவில்லை என்று தெரிவித்தார். "தை பிறந்தால் வழி பிறக்கும்" எனக் குறிப்பிட்ட அவர், தொண்டர்களின் எண்ணப்படியே விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.


