தீபாவளி பெருந்துயரம்: 48 மணி நேரத்தில் 4,098 பேர் காயம்...2 பேர் உயிரிழப்பு..!
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி கடந்த 7-ம் தேதி காலை முதல் 9-ம் தேதி காலை வரையிலான 48 மணி நேரத்தில், பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீக்காயங்கள், சாலை விபத்துகள் மற்றும் தகராறுகளால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக தமிழகம் முழுவதும் 4,098 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்திலேயே அதிகபட்சமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 237 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து மதுரையில் 206 பேரும், செங்கல்பட்டில் 185 பேரும், சென்னை பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் 138 பேரும், தூத்துக்குடியில் 91 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு மற்றும் விபத்து தொடர்பான சம்பவங்களில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆஸ்பத்திரிகளில் அனுமதி செய்யப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

