தீபாவளி பண்டிகை சிறப்பு சலுகை: கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி ரகங்களுக்கு 30% வரை தள்ளுபடி அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸின் அனைத்து விற்பனையகங்களிலும் கைத்தறி ரகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் நேற்று (செப்டம்பர் 29) நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, குத்து விளக்கு ஏற்றி, சிறப்பு சலுகை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தீபாவளிக்கு 30 சதவீத தள்ளுபடி திட்டத்துடன், தங்க மழை திட்டமும் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ. 2 ஆயிரம் அல்லது அதற்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த போட்டிக்கான கூப்பன் வழங்கப்பட்டு, அதில் இருந்தே குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், கோவை, சேலம், ஆரணி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெசவு செய்யப்படும் புதிய வடிவமைப்புகளுடன் கூடிய மென் பட்டு சேலைகள், உயர் ரக பருத்தி சேலைகள், கோவை காட்டன், கோரா காட்டன் சேலைகள், காரைக்குடி செட்டிநாடு காட்டன் சேலைகள், ஜெயங்கொண்டம் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு ரக சேலைகள் விற்பனைக்கு ஆஃபரில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆடைகள் மட்டுமின்றி ஏற்றுமதி ரக படுக்கை விரிப்பான்கள், தலையணை உறைகள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

