நெருங்கும் தீபாவளி.. ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு தடையின்றி கிடைக்க வழிசெய்க.!! - டிடிவி தினகரன்..

 
TTV

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் துவரம்பருப்புக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும்,  ஒப்பந்த நிறுவனங்களுக்கு சலுகையை வழங்கி பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் தமிழக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான துவரம் பருப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

துவரம் பருப்பு

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு துவரம்பருப்பு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், ஒப்பந்தத்தின் படி உரிய நேரத்தில் துவரம்பருப்பை விநியோகம் செய்யாமல் காலம் தாழ்த்துவதே நியாயவிலைக்கடைகளில் தட்டுப்பாடு நிலவ முக்கிய காரணம் என கூறப்படுகிறது. 

நியாயவிலைக்கடைகளில் வழங்கபடும் சர்க்கரையின் அளவு உயர்த்தி வழங்கப்படும், நிறுத்தப்பட்ட உளுத்தம்பருப்பு மீண்டும் விநியோகம் செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதிகளை தற்போதுவரை நிறைவேற்றாத திமுக அரசு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த துவரம்பருப்பையும் முறையாக வழங்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

ரேஷன் கடை

ஏற்கனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின் படி 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம்பருப்பை கொள்முதல் செய்வதற்கு பதிலாக தரம் குறைந்த கனடா மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்வதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு இயற்கையானதா ? அல்லது கனடா மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட செயற்கை தட்டுப்பாடா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.   

எனவே, நெருங்கி வரும் தீபாவளிப் பண்டிகையை கருத்தில் கொண்டு ஒப்பந்தம் வழங்கிய நிறுவனங்களிடமிருந்து உரிய துவரம்பருப்பை கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.