தீபாவளி பரிசு.. அதிரடியாக குறையும் வீட்டு உபயோகப்பொருட்களின் விலை - முழு விவரம..!
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று கூடியது.
இதில் பேசிய நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்த திட்டத்தை, அதாவது 4 அடுக்கு வரி விகிதம் 2 அடுக்கு வரி விகிதமாக மாற்றப்படுவதை வெளியிட்டார். இது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலில் விவாதம் நடந்தது. 10 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட இந்த விவாதம் இரவில் நிறைவடைந்தது. இதில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம், அதாவது 2 அடுக்காக குறைக்கப்படும் ஜி.எஸ்.டி.2.0 கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் இருந்து பேசிய பிரதமர் மோடி, அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான தொனியை வகுத்தார். தீபாவளிக்குள், விரைவில் அதற்கான பலனை வழங்க அவர் முடிவு செய்தார்.
இதன்படி ஜி.எஸ்.டி. வரி அடுக்குகளைக் குறைத்துள்ளோம். இனிமேல் 5 மற்றும் 18 சதவீதம் என 2 அடுக்குகள் மட்டுமே இருக்கும். மேலும் இழப்பீட்டு வரி தொடர்பான பிரச்சினைகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சாதாரண மக்களை மையமாக வைத்து இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களது அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான ஒவ்வொரு வரியும் கடுமையான மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண மனிதர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பயன்பாட்டு பொருட்களில், முழுமையான குறைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி. குறைப்பு வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது” என்று அவர் கூறினார்.
ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்
மிக அதிக வெப்பநிலை பால், சென்னா மற்றும் பனீர். ரொட்டி, பரோட்டா அனைத்துக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே இவற்றின் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி அனைத்தும் பூஜ்ஜியமாகிவிடும்.
பென்சில், அழிப்பான், வரைபடங்கள், நோட்டு புத்தகங்கள், கலர் பென்சில் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
மருந்து பொருட்கள்
மேலும் 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. இதைப்போல தனிநபர் ஆயுள், சுகாதார காப்பீடு பிரீமியத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
வரி குறையும் பொருட்கள்
ஹேர் ஆயில், கழிவறை சோப்பு, சோப்பு பார்கள், ஷாம்புகள், பல் துலக்கும் பிரஷ், பற்பசை, சைக்கிள்கள், மேஜைப் பாத்திரங்கள், சமையலறைப் பாத்திரங்கள் மற்றும் பிற வீட்டுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
தையல் எந்திரம், நாப்கின், டயாபர், புஜ்ஜியா, சாஸ்கள், பாஸ்தா, உடனடி நூடுல்ஸ், சாக்லேட்டுகள், காபி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கார்ன்பிளக்ஸ், வெண்ணெய், நெய் போன்றவை 12 சதவீதம் அல்லது 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகின்றன.
காலணிகள், ஆடைகள்
பாட்டில் குடிநீர் (20 லிட்டர்), பழஜூஸ்கள், பிஸ்கட், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், சைக்கிள், குடைகள், உலர் பழங்கள், உறைந்த காய்கறிகள், சைக்கிள், பாத்திரங்கள், சணல் மற்றும் பருத்தி கைப்பைகளும் விலை குறைகின்றன.
டிராக்டர்கள், விவசாயம், தோட்டக்கலை மற்றும் வனவியல் எந்திரங்கள், அறுவடை அல்லது கதிரடிக்கும் எந்திரங்கள், வைக்கோல் அல்லது தீவன பேலர்கள், புல் அல்லது வைக்கோல் நகர்த்தும் எந்திரங்கள், உரம் தயாரிக்கும் எந்திரங்கள் போன்ற விவசாயப் பொருட்கள் அனைத்தும் 12-ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகின்றன.
ஏ.சி., டி.வி.க்கள்
ஏ.சி. எந்திரங்கள், 32 அங்குலத்திற்கு மேல் உள்ள டி.வி.க்கள், பாத்திரங்களை கழுவும் எந்திரங்கள், சிறிய கார்கள், 350 சி.சி.க்கு உட்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அனைத்துக்கும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
12 உயிரி பூச்சிக்கொல்லிகள், இயற்கை மெந்தோல் ஆகியவற்றுக்கு 12-ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் கைவினைப்பொருட்கள், மார்பிள், கிரானைட் பிளாக், நடுத்தர தோல் பொருட்களும் 5 சதவீதமாக குறைக்கப்படுகின்றன. சிமெண்டுக்கு 28-ல் இருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
புற்றுநோய், அரியவகை நோய்கள் மற்றும் பிற கடுமையான நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் 3 உயிர்காக்கும் மருந்துகளுக்கு 5 சதவீதத்தில் இருந்து 0 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.
இதைத்தவிர ஏராளமான மருந்துகள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைகின்றன. மேலும் பார்வையை சரிசெய்யும் கண்ணாடிகள் மற்றும் கண் கண்ணாடிகளும் 28 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்படுகின்றன.
விலை குறையும் பொருட்கள் பட்டியல்
வரி விலக்கு பெறும் பொருட்கள்:
பால், சென்னா, பனீர், ரொட்டி, பரோட்டா, பென்சில், அழிப்பான், வரைபடங்கள், நோட்டு புத்தகங்கள், கலர் பென்சில்.
உயிர்காக்கும் 33 மருந்துகள், தனிநபர் ஆயுள் மற்றும் காப்பீடு பிரீமியம்.
வரி குறையும் பொருட்கள் (5 சதவீதம்):
ஹேர் ஆயில், கழிவறை சோப்பு, சோப்பு பார்கள், ஷாம்புகள், பல் துலக்கும் பிரஷ், பற்பசை, சைக்கிள்கள், சமையலறைப் பாத்திரங்கள்.
நாப்கின், டயாபர், புஜ்ஜியா, சாஸ்கள், பாஸ்தா, உடனடி நூடுல்ஸ், சாக்லேட்டுகள், காபி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கார்ன்பிளக்ஸ், வெண்ணெய், நெய்.
பாட்டில் குடிநீர், பழஜூஸ்கள், பிஸ்கட், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், தையல் எந்திரம், குடைகள், உலர் பழங்கள், உறைந்த காய்கறிகள்.
உரம், பூச்சிக்கொல்லி, டிராக்டர், அறுவடை அல்லது கதிரடிக்கும் எந்திரம், உரம் தயாரிக்கும் எந்திரம்.
வரி குறையும் பொருட்கள் (18 சதவீதம்):
ஏ.சி. எந்திரங்கள், டி.வி.க்கள், பாத்திரம் கழுவும் எந்திரங்கள், சிறிய கார்கள், 350 சி.சி.க்கு உட்பட்ட மோட்டார் சைக்கிள்கள். சிமெண்டு.
1,200cc-க்கும் குறைவான கார்கள், 350cc மற்றும் அதற்கு கீழான இரு சக்கர வாகனங்களுக்கான GST வரி 28%லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த GST வரி மாற்றம் காரணமாக, இனி ₹10 லட்சத்திற்கு கார் வாங்கினால், ஒரு லட்சம் வரையும், *2.50 லட்சத்திற்கு பைக் வாங்கினால் ₹15- ₹18 ஆயிரம் வரையும் விலை குறைந்தது. புதிய GST வரி செப்.22ல் அமலுக்கு வருகிறது.


