CM அடியாளால் பல பெண்கள் பாதிப்பு- திவ்யா சத்யராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

 
Q

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் புத்தெழுச்சி நாள் விழா, சென்னை எழும்பூரில் கொண்டாடப்பட்டது. அதில், திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, புத்தாடைகள், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, உபகரணங்கள், திருநங்கைகளுக்கு நலஉதவி, ரத்ததானம் அளித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஆகியவை வழங்கப்பட்டன.

அதில், திருச்சி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசும்போது, "நாங்கள் செய்த நல்லதை மறைக்கவும், பொய்யென்று சொல்லவும் ஒரு மாஃபியா டீம் சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வருகிறது. சிறுவர்கள் சொல்லி வாக்களித்ததாக கூறிய 30 சதவீதம் பேர், தற்போது ஏன் வாக்களித்தோம் என்று வருத்தப்படுகின்றனர்.

தேர்தலுக்கு முன் திமுகவுக்கு எதிராக பரப்புரை செய்த முதலமைச்சர் விஜய், தற்போது திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்கிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து முதல்வர் பேசியிருக்கிறார். முதல்வர் 6 மாதம் அவகாசம் கேட்கிறார். ஆனால், சட்டம் ஒழுங்கு, நலத்திட்ட உதவிகளுக்கும் 6 மாதம் எப்படி பேசாமல் இருக்க முடியும்?

திமுக அரசின் சாதனைகளுக்கும் தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தவெகவை சார்ந்தவர்கள் பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுங்கள். பெண் காவலர்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பது வருத்தம் அளிக்கிறது" என்றார்.

அவரைத் தொடர்ந்து, திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் பேசும்போது, "சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி பொய்யான அவதூறுகளை பேசி வருகின்றனர். நான் இனி சத்தமாக பேசப் போகிறேன். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டைப் பார்த்து பிற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்தது. திமுகவின் மிகப்பெரிய சக்தி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஒரு அடியாள் இருக்கிறார். அவர், சமூக வலைத்தளங்களில் மாஃபியாக்களை உருவாக்கி, பெண்களை அவதூறாக பேசி வருகின்றார். சினிமா கனவுகளோடு வரும் பெண்களை பெரிய நடிகர்களுடன் நடிக்க வைப்பதாக கூறி பலரின் வாழ்வை அந்த அடியாள் கெடுத்துள்ளார்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் திவ்யா சத்யராஜ் பேசும்போது, அவர் குறிப்பிட்ட அந்த அடியாள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "முதல்வரின் அடியாளின் பெயரை சுருக்கமாக மிஸ்டர் ஜெ. என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு மாஃபியா நிறுவனத்தை நடத்தி வரும் மிஸ்டர் ஜெ. சமூக வலைத்தளங்களில் பெண்கள் பற்றி அவதூறு பரப்பி வருகிறார். கிராமங்களில் இருந்து சினிமா கனவுடன் வரும் பெண்களிடம், பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, அவர்களின் வாழ்க்கையை அந்த நபர் சீரழித்துள்ளார்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் என்னுடைய பேஷண்ட். பட்டியல் சமூகத்தை சேர்ந்த அந்த பெண், முதல்வரின் அடியாள் செய்த துன்புறுத்தலால் தனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்" என்று தெரிவித்தார்.