பள்ளிக்கல்வித் துறையில் மாவட்ட வாரியாக கண்காணிப்பு குழு நியமனம்..

 
School Education

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

அண்மைக்காலமாக பள்ளிக்கல்வித்துறையை கேள்விக்கு உள்ளாக்கும் விதமாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதில் ஒன்றாக  திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் காட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதிக எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கையை பதிவு செய்து, நலத்திட்ட உதவிகளை பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியிலும் முறைகேடு நடந்திருப்பதை பள்ளிக்கல்வித்துறை கண்டறிந்துள்ளது. 

school

இதனையடுத்து இதுபோன்ற முறைகேடுகளை களைவதற்காகவும், பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கல்வித்துறையில் ஐ.ஏ.எஸ். தரத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.  இந்த அதிகாரிகள், அரசின் நலத்திட்டங்கள் பள்ளிகள் மற்றும் முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்வார்கள் என கூறப்படுகிறது.  இந்த குழு மாதத்திற்கு ஒருமுறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு  மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து 5ம் தேதிக்கு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.