அமோனியா வாயு முழுமையாக அகற்றப்பட்ட பிறகு தொழிற்சாலைக்கு சீல் - மாவட்ட ஆட்சியர் கவிதா..!

 
11

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியார் கடல் உணவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து 83 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தொழிற்சாலையில் இருந்த 400 டன் பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள் மாற்றுக்கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில் தொழிற்சாலையில் இருந்து அமோனியாவை பாதுகாப்பாக அகற்றும் பணிகள் நேற்று தொடங்கி 2-ஆம் நாளாக இன்றும் நடைபெற்றன. தொழிற்சாலையில் 3 டேங்கர்களில் சேமித்து வைக்கப்பட்ட அமோனியா வாயு நேற்று பாதுகாப்பாக அகற்றப்பட்ட நிலையில், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் பைப்புகளில் தேங்கிய அமோனியாவை வெளியேற்றி டேங்கர் லாரியில் மாற்றம் செய்யும் பணிகள் 2-ஆம் நாளாக இன்று நடைபெற்று வந்தன.

இந்நிலையில், 2-ஆம் நாள் பணிகள் நிறைவடைந்த நிலையில், 3-வது நாளான இன்றும்  திங்கள்கிழமை அமோனியா வாயு, டேங்கர் லாரிக்கு மாற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார். மேலும், அமோனியா வாயு முழுமையாக அகற்றப்பட்ட பிறகு தொழிற்சாலைக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

கடந்த 2 நாட்களாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தொழிற்சாலையை ஒட்டிய சாலையில் மட்டும் போக்குவரத்து தடை செய்து எதிர்சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அருகே உள்ள தொழிற்சாலையில் வழக்கம் போல பணிகள் மேற்கொள்ள பணியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.