பாஜக கூட்டணியால் அதிருப்தி- அதிமுக நிர்வாகி விலகல்

பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே களை கட்ட தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கடந்த 2023-ஆம் ஆண்டு பிரிந்த அதிமுக- பாஜக கூட்டணி தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. அதிமுகவும் பாஜகவும் இணைந்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அதேசமயம் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் 2026 தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அதிமுக சிறுபான்மையினர் பிரிவு ஆலங்குடி நகரச் செயலாளர் கே.எஸ்.முகமது கனி, அதிமுகவில் இருந்து விலகுவதாக மாவட்டச் செயலாளர் சி.விஜயபாஸ்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “நான் கடந்த 45 ஆண்டு காலமாக அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளிலிருந்து கட்சிக்கு பணியாற்றினேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பாசிச பாஜகவுடன் கூட்டணி வைத்ததை அடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.